பட்டாம்பூச்சிகள் எவ்வளவு காலம் வாழ்கின்றன? தெரிந்து கொள்ளுங்கள்
வண்ணத்துப்பூச்சியின் வாழ்நாள் இனத்துக்கு இனம் மாறுபடும். பொதுவாக ஒன்றன் வாழ்நாள் 20-40 நாட்களாக இருக்கும். ஆகக் குறைந்த வாழ்நாள் 3 - 4 நாட்களாக (Copper Butterflies and Blue Butterflies) இருக்கும். முட்டையிட்டு முடிந்த வண்ணத்துப்பூச்சி தன கடமை முடிந்ததென்று அதன் பின் இறந்து விடும்.
வண்ணத்துப் பூச்சியின் உடலில் இருந்து புவியின் காந்தமண்டலத்தால் வழிகாட்டப்படும் ஏதோ பொறிமுறை யொன்று அவற்றின் பயணத்தை வழிப்படுத்துகிறது. ஆனால் இந்த நெடும் பயணத்தின் ஒருவழிப் பயணம் அவற்றின் நான்கு தலைமுறைகளையும் ஒரு முழு ஆண்டுக்காலத்தையும் எடுக்கிறது. ஒரு தலைமுறை முட்டையிட்டுத் தன் பயணத்தை முடித்துக் கொண்ட இடத்திலிருந்து அடுத்த தலைமுறை தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.
முதலில் முட்டைப்பருவம் என்று ஒன்று இருக்கிறது. வண்ணத்துப் பூச்சியின் பிற்கால அம்சங்களான நுண்ணிய விலா வரிகள் முட்டையிலயே காணப்படுகின்றன என்பதனால் வண்ணத்துப் பூச்சி முட்டைகள் கோழிமுட்டைகளை விடக் கொஞ்சம் முன்னேறிய வகையாகத்தான் எண்ணப்பட வேண்டியிருக்கிறது இந்த முட்டைகள் சத்துள்ள செழிப்பான இலை வகைகளைக் கொண்ட முருங்கை, மில்க்வீட் போன்ற தாவரங்களிலயே இடப்படும். முட்டைப்பருவக் காலம் 3 – 5 நாட்களாகும்
முட்டைகள் பொரித்து மயிர்கொட்டிப்புழுக்கள் உருவாகின்றன. மயிர்கொட்டிகள் அசகாய சாப்பாட்டு இராமர்கள். ஒரு முருங்கை மரத்தை ஒரு சிறு கொலனி ஒருவாரத்துக்குள் ஒருகை பார்த்துவிடும். வளர,வளர உடல் பருமனாகவும் மூன்று அல்லது நான்கு தடவைகள் அவற்றுக்குத் தோல் கழற்ற நேர்கிறது ஆனாலும் மயிர்கொட்டியின் மொத்த வாழ்நாள் 5-10 நாட்களாகும்.
வளர்ந்து முடித்த மயிர்கொட்டி தன்னைச்சுற்றி ஒரு கூடு நெய்துகொண்டு அதற்குள்ளே உறங்கப் போய்விடுகிறது. இந்தப் பருவத்தை நாம் பியூப்பா அல்லதி கிறைசாலிஸ் பருவம் என்கிறோம் இந்த பியூப்பாக் கூடு சுற்றாடலோடு இயையும் வண்ணத்தில் இருப்பதனால் உள்ளே உறங்கும் புழுவுக்கு அது பாதுகாப்பாக அமைகிறது.
இந்த நேரத்தில் தான் மயிர்கொட்டி உண்ட சத்துணவின் பலம் வெளிப்படுகிறது. புழுவுக்கு இறக்கைகள், கால்கள் உணர்கொம்புகள் எல்லாம் முளைத்து அது பெரியவனாகி/பெரியவளாகிக் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. பியூப்பாவின் காலம் 7 – 10 நாட்களென்றாகிறது
வெளியே வந்த சில நிமிடங்களில் பறக்கத் தொடங்கும் வண்ணத்துப் பூச்சியின் இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் புணர்ந்து பெண்கள் முட்டையித் தொடங்குகின்றன. ஆண். பெண் இரண்டுமே தமது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதும் இறந்து விடுகின்றன இவற்றின் வாழ்நாள் 2 – 4 வாரங்களாகும். புணர்ச்சியின் பின் ஆண்கள் உடனடியாக இறந்துவிடும். இரண்டொரு நாட்களின் பின் முட்டையிட்தும் பெண்களும் இறந்து விடும் .