பிரான்சில் இதுவரை எத்தனை பேர் 2 தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்? பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு விரைவில் தடை?
பிரான்சில் இதுவரை கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 10 மில்லியனை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக பரவியது. இதனால் அங்கு கட்டுப்பாடுகளுடன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன் படி, கடந்த 24 மணிநேரத்தில் 287,131 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 254,723 பேர் தங்களது கொரோனாவிற்கான, முதலாவது தடுப்பூசியினையும், 32,408 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில், கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 9.7 மில்லியனை தொட்டுள்ளது. இது இப்படியே சென்றால், இந்த மாத இறுதிக்குள் பிரான்சில் 10 மில்லியனை நெருங்கிவிடும் என்று அரசு அதிகாரிகள் நம்புகின்றனர்.
நாட்டில் இப்போது தான் கொரோனா பரவல் குறைந்து வருவதால், பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
ஏனெனில், பிரித்தானியாவில் மிக வேகமாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா B.1.617 வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் பிரித்தானியிவில் இருந்து வருவபவர்களிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், பிரித்தானியாவில் இருந்து வருபவர்கள் மீதான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்கான, ஆலோசனைகளில் பிரான்ஸ் இறங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், உடனடியான தீர்வுகளை நாம் உடனடியாக எடுத்தே ஆக வேண்டிய, கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் ஈவ் லூத்ரியோன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.