2022, 2023ஆம் ஆண்டுகளில் கனடா எத்தனை புலம்பெயர்வோரை வரவேற்க திட்டமிட்டுள்ளது தெரியுமா?
கொரோனா காரணமாக கனடாவின் பயணக்கட்டுப்பாடுகளில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சினைகளால், குடியுரிமை விண்ணப்பங்கள் ஏராளம் பரிசீலிக்கப்படாமல் இருந்துவிட்டதுடன், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை இலக்கை அடையவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே கனடாவுக்கு வந்திருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அத்தகைய சிக்கலான ஒரு சூழ்நிலையிலும், கனடா அரசு, பொருளாதாரத்தை வலிமைப்படுத்துதல், குடும்பங்களை ஒன்றிணைத்தல் மற்றும் மனிதநேய அடிப்படையில் உதவி தேவைப்படுவோருக்கு உதவுதல் என்னும் தன் மூன்றடுக்கு புலம்பெயர்தல் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.
கொரோனா காலகட்டத்தின்போது புலம்பெயர்தல் மட்ட இலக்குகள் அதிகரித்துள்ளதுடன், விண்ணப்பங்களைப் பரிசீலித்தலும் தொடர்கிறது.
இந்நிலையில், கொரோனா தனது மூன்றாவது ஆண்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், இன்னமும் அது கனேடிய புலம்பெயர்தலுக்கு முக்கிய இடைஞ்சலாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு, அடுத்த 12 மாதங்களில் கனேடிய புலம்பெயர்தலில் என்னென்ன முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.
2022 - 2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டம்
2022இல், கனடா இரண்டு புலம்பெயர்தல் மட்ட திட்டங்களை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த திட்டங்கள், கனடாவுக்கு புதிய நிரந்தர வாழிடம் கோரும் எத்தனை பேர் வரவேற்கப்படுவார்கள், மற்றும் புதிதாக புலம்பெயர்வோர் எந்த திட்டங்களின் கீழ் வரவேற்கப்படுவார்கள் என்பதற்கான இலக்கு குறித்து தெரியப்படுத்தும். தற்போதைய திட்டத்தின்படி, 2022இல் கனடா 411,000 புலம்பெயர்வோரையும், 2023இல் 421,000 புலம்பெயர்வோரையும் வரவேற்க உள்ளது.
என்றாலும், பெடரல் அரசு தன் புதிய திட்டத்தை வெளியிடும்போது இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
இதற்கிடையில், கனடாவில் அதிகரித்து வரும் தொழிலாளர்கள் பற்றாக்குறை, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் தங்கிவிட்டது, 40,000 ஆப்கன் அகதிகளை குடியமர்த்தும் அரசின் திட்டம் போன்ற காரணங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.