சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெற்ற முதல் பெண்மணிக்கு நேர்ந்த பரிதாபம்
சுவிட்சர்லாந்தில் முதல் கொரோனா தடுப்பூசி, 2020 டிசம்பர் 23 அன்று வழங்கப்பட்டது.
Lausanneஇல் வாழும் 90 வயது பெண்மணி ஒருவர்தான், முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, 5,752,384 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பெடரல் பொது சுகாதார அமைப்பின் கண்காணிப்பு அமைப்பு 2020 டிசம்பரிலிருந்து, இந்த ஆண்டு ஆகத்து வரை 20 சுவிஸ் மருத்துவமனைகளில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, கொரோனா தொற்று காரணமாக 5,928 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 495 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அப்படி உயிரிழந்தவர்களில் 14 பேர் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள்.
அதாவது, இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து, இதுவரை கொரோனா தடுப்பூசி முழுமையாக பெற்றவர்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வெகு சிலரே என்கிறது, அந்த அமைப்பு.
ஆனால், அப்படி கொரோனா தடுப்பூசி முழுமையாக பெற்றும் உயிரிழந்தவர்களில், சுவிட்சர்லாந்தில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பெற்ற பெண்மணியும் ஒருவர் என்பது கவலைக்குரிய விடயம்தான். அவர் தனது மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருந்த நிலையில் உயிரிழக்க, சுவிட்சர்லாந்து பூஸ்டர் டோஸ் வழங்க தாமதித்ததுதான் அவர் உயிரிழக்கக் காரணம் என அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
அவரைப் போலவே, முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றும் உயிரிழந்தவர்களில், 5 பேர் 80 வயதைத் தாண்டியவர்கள், 5 பேர் 70 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 4 பேர் 60 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மேலும், உயிரிழந்தவர்களில் 44 பேர், ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி மட்டும் பெற்றவர்கள்.
ஆக, கொரோனா தடுப்பூசி பெற்ற சிலர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது உண்மைதான் என்றாலும், கொரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பான்மையோர், அதாவது 437 பேர் தடுப்பூசி பெறாதவர்கள் ஆவர்.
அத்துடன், கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 5,928 பேரில் 5,488 பேர் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள்தான். முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களில் 153 பேர் மட்டுமே கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள் என்கிறது பெடரல் பொது சுகாதார அமைப்பின் கன்காணிப்பு அமைப்பு.