சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? ஒரு பயனுள்ள தகவல்
சுவிஸ் குடியுரிமை பெறுவது கடினமான ஒரு விடயம்... கூடவே, அதற்கான செலவும் சற்று அதிகம்தான்!
ஆனால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு இவ்வளவுதான் செலவாகும் என, ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்டுச் சொல்லிவிடமுடியாது. காரணம், அது மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
உலகிலேயே அதிகம்பேர் சுவிஸ் குடிமக்களாக ஆகத்தான் விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகின் அதிக விலைவாசி உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என்பது எப்படி உண்மையோ, அதேபோல, அங்கு குடியுரிமை பெறுவதும் அதிக செலவு பிடிக்கும் விடயமாகும்!
சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு பொதுவாக என்னென்ன கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதல் விடயம், சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும்போது நீங்கள் செலுத்தும் கட்டணம், எக்காரணம் கொண்டும் திரும்பக் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்!
சுவிட்சர்லாந்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு, மூன்று மட்டங்களில் (three different levels) கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். அதாவது, பெடரல், மாகாண மற்றும் முனிசிபாலிட்டி அளவில் மூன்று கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கும்.
முதலில் பெடரல் கட்டணம்
பெடரல் அதிகாரிகளிடம் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும்போது செலுத்தவேண்டிய தொகை ஓரளவுக்கு குறைவுதான். பெரியவர்களுக்கு என்றால் ஒருவருக்கு 100 சுவிஸ் பிராங்குகள், தம்பதியருக்கு என்றால், 150 பிராங்குகள்.
அடுத்து, மாகாண மற்றும் முனிசிபாலிட்டி குடியுரிமை கட்டணம்
மாகாண அளவில், மற்றும் முனிசிபாலிட்டி அளவில் நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணம் 500 பிராங்குகளிலிருந்து, 3,000பிராங்குகளுக்கும் அதிகமாகவும் இருக்கக்கூடும்.
Jura மாகாணத்தில் நிர்வாகக் கட்டணம் 550 முதல் 1,600 பிராங்குகள் வரை, Fribourgஇல் 1,800 முதல் 3,000 பிராங்குகள் வரை.
மற்ற மாகாணங்களைப் பொருத்தவரை, Vaud மாகாணத்தில் 550 பிராங்குகள் முதல் 800 பிராங்குகள் வரை, Valais மாகாணத்தில் 1,000 பிராங்குகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
ஜெனீவாவில், முன்பு ஒருவரது வருவாயைப் பொருத்து குடியுரிமைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது, இப்போது ஒருவரது வயது, நீங்கள் தனி நபராக விண்ணப்பிக்கிறீர்களா அல்லது தம்பதியராக விண்ணப்பிக்கிறீர்களா என்பதைப் பொருத்து கட்டணம் முடிவுசெய்யப்படுகிறது.
ஜெனீவாவில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம், 11 முதல் 17 வயதுள்ளவர்களுக்கு 300 சுவிஸ் பிராங்குகள், 25 வயதுக்கு கீழ் உள்ள வயதுவந்தவர்களுக்கு 850 சுவிஸ் பிராங்குகள், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1250 சுவிஸ் பிராங்குகள், 25 வயதுக்கு குறைவான, ஒரு பிள்ளை உடைய தம்பதியருக்கு 1360 சுவிஸ் பிராங்குகள், 25 வயது தாண்டிய தம்பதியருக்கு 2,000 சுவிஸ் பிராங்குகள் மற்றும் ஒரு பிள்ளைக்கு 300 சுவிஸ் பிராங்குகள்.
சூரிச்சில், வெளிநாட்டில் பிறந்தவர்களில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 பிராங்குகள்.
25 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தை முனிசிபாலிட்டி அதிகாரிகள் சமீபத்தில் நீக்கினார்கள். ஆனாலும், மாகாண மட்டத்தில் கட்டணம் உண்டு.