விஸ்வகர்மா திட்டத்தில் எவ்வளவு கடன் கிடைக்கும்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
விஸ்வகர்மா திட்டத்தில் குறைந்த வட்டியில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதை பற்றியும், அதை பற்றிய விவரங்களையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
விஸ்வகர்மா திட்டம்
செப்டம்பர் 17 திகதி விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்துவருபவர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கான விஸ்வகர்மா திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதாவது, 18 பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 13,000 கோடி மதிப்பீட்டில் இந்த விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டது.
எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது?
இந்த திட்டத்தின் கீழ் உள்ள தகுதியானவர்கள் பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மூலம் அங்கீகாரமும், பயிற்சி மற்றும் கருவித்தொகுப்புக்கான ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஊக்கத்தொகையுடன் கூடுதலாக முதல் தவணையில் வட்டியில்லா கடனாக ரூ.1 லட்சமும், இரண்டாவது தவணையில் 5% வட்டி விகிதத்தில் ரூ. 2 லட்சம் வரையும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
தகுதியானவர்கள் யார்?
இந்த விஸ்வகர்மா திட்டத்தில் தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் தயாரிப்பவர், கயிறு திரிப்பவர்கள், பொம்மை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர்,பொம்மை செய்பவர், பூ கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், சுத்தியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய முடியும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் வயது 18 ஆக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் சுய தொழிலுக்காக மத்திய அரசு அல்லது மாநில அரசின் கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் கடன் பெற்றிருக்க கூடாது.
இதில், ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த திட்டத்தில் பலன் பெறுபவர்கள் www.pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.