Home Loan: வீட்டு கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் Processing கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சொந்த வீடு கட்டுவதற்கு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன்களுக்கு வசூலிக்கும் பிராசசிங் கட்டணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வீட்டுக் கடன்கள்
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர். வங்கிக்கு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபட்டாலும் ப்ராசஸிங் கட்டணத்தையும் வங்கிகள் வசூலிக்கின்றன.
சில வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனுக்கான ப்ராசஸிங் கட்டணங்கள் கடன் தொகையில் 2 சதவீதமும், சில வங்கியில் 0.35 சதவீதமும் வசூலிக்கின்றன.
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனை பொறுத்தவரை 0.35% வரை செயலாக்க கட்டணத்தை வசூல் செய்கின்றன. அதாவது, குறைந்தப்பட்சமாக ரூ.2 ஆயிரம் மற்றும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வசூலிக்கின்றன. அதோடு, ஜிஎஸ்டி தொகையையும் நாம் செலுத்த வேண்டும்.
இந்த வங்கியில் வீட்டுக்கடன்கள், 8.40 சதவீதம் முதல் மிகக் குறைந்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது. மேலும், நாம் 65 புள்ளிகள் வரை அடிப்படை சலுகையை பெறலாம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC)
ஹெச்டிஎஃப்சி வங்கியை பொறுத்தவரை செயலாக்க கட்டணம் வெவேறு விதமாக வசூல் செய்யப்படுகிறது. அதாவது, சம்பளம் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களுக்கு வாங்குகின்ற வீட்டுக்கடனில் 0.50% அல்லது ரூ.3,000 வரை வசூல் செய்யப்படுகிறது.
இதுவே, தொழில் செய்யாத நபர்களுக்கு என்றால் வாங்குகின்ற வீட்டுக்கடனில் 1.50% அல்லது ரூ.4,500 வரை வசூல் செய்யப்படுகிறது. மேலும், இந்த வங்கியில் வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் 8.50% வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
ஆக்சிஸ் வங்கியில் வீட்டுக் கடன் தொகையில் 1% மற்றும் ஜிஎஸ்டிக்கு சமமான செயலாக்க கட்டணத்தை வசூல் செய்கிறது. மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.10% மற்றும் 9.40% ஆகும். இது, மற்ற வங்கிகளை பொறுத்தவரை அதிகமாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன் தொகையில் இருந்து 0.50% முதல் 2% வரை பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதோடு, ஜிஎஸ்டி தொகையையும் நாம் செலுத்த வேண்டும். இந்த வங்கியில், 8.64% முதல் 9.40 % வரை வீட்டுக்கடன் வட்டிவிகிதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன் தொகையில் இருந்து 0.35% வரை ப்ராசஸிங் கட்டணம் உள்ளது. அதாவது, குறைந்தபட்சமாக ரூ. 2,500 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |