புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கும் பிரித்தானியா: ஏற்கனவே சந்தித்துள்ள இழப்பு எவ்வளவு தெரியுமா?
முந்தைய ஆட்சியாளர்களைப்போலவே, புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்யத் துவங்கிவிட்டார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ருவாண்டா திட்டம் போன்ற புலம்பெயர்தலுக்கு எதிரான திட்டங்களை அவர் ரத்து செய்ய இருப்பதாகக் கூறியபோது, அதை நிறைவேற்றியபோது, பலரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால், சமீபத்திய தேர்தல் தோல்விகள், ஸ்டார்மரை வழக்கமான அரசியல்வாதியாக்கிவிட்டதுபோல் தெரிகிறது.
விடயம் என்னவென்றால், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளின் பலனை ஏற்கனவே பிரித்தானியா அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கல்வித்துறையைச் சார்ந்தவர்கள்.
ஏற்கனவே ஏற்பட்டுள்ள இழப்பு
ஆம், சர்வதேச மாணவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளால், பிரித்தானியாவுக்குக் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துவருகிறது.
இப்படி சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறிந்துகொண்டே போனால், அது நிதி மற்றும் ஊழியர்கள் தொடர்பில் கடுமையான சவால்களை உருவாக்கும் என எச்சரிக்கின்றன இங்கிலாந்திலுள்ள கல்வி நிறுவனங்கள்.
பிரித்தானிய மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணம் பல மடங்கு அதிகம் என்பது பலரும் அறிந்ததே.
மேலும், வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தால்தான், பிரித்தானிய மாணவர்களால் ஏற்படும் நிதி இழப்பை சரி செய்ய முடிகிறது.
இந்நிலையில், சமீபத்திய புலம்பெயர்தல் மற்றும் விசா கட்டுப்பாடுகளால் பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
என்றாலும், அரசு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டுவருகிறது.
பல்கலை மற்றும் கல்லூரிகள் யூனியனுடைய பொதுச்செயலரான Jo Grady, அரசின் நடவடிக்கைகளால் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பல பல்கலைக்கழகங்கள் கடுமையான ஏற்கனவே நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும், கல்வித்துறையில் சுமார் 10,000 பேர் வேலையிழந்ததாகவும் சமீபத்திய, துறைசார் அறிக்கை ஒன்று உறுதி செய்ததாக தெரிவிக்கிறார்.
சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் நைஜலின் (Nigel Farage) Reform UK கட்சி, லேபர் வசம் இருந்த முக்கிய தொகுதிகள் சிலவற்றை கைப்பற்றிவிட்டதால் கலக்கமடைந்துள்ள ஸ்டார்மர், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் ஆயுதத்தை தானும் கையில் எடுத்துள்ளார்.
ஆனால், அவரது கட்டுப்பாடுகளால் சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்படுவார்களானால், அதன் பலனை பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் அனுபவிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் Grady.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |