பிரான்சில் சுகாதார பாஸ் விதிகளில் நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றம்
நாளை (டிசம்பர் 15) முதல், பிரான்ஸ் கொரோனா சுகாதார பாஸ் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் அமுலுக்கு வருகிறது.
அது நாட்டிலுள்ள பலர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
பிரான்சில் உணவகங்கள், மதுபான விடுதிகள் போன்ற இடங்களுக்குள் நுழைவதற்கும், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பயணிப்பதற்கும் கொரோனா சுகாதார பாஸ் அவசியம் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
இந்த கொரோனா சுகாதார பாஸ் டிஜிட்டல் வடிவிலும், அச்சிடப்பட்ட காகித வடிவிலும் பயன்பாட்டில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கீழ்க்கண்ட விடயங்களை செய்துள்ளோர் மட்டுமே கொரோனா சுகாதார பாஸ் ஒன்றை வைத்திருக்கமுடியும்...
முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பவர்கள். (உங்களுக்கு கடந்த 11 மாதங்களுக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து நீங்கள் விடுபட்டிருந்தால், அது நீங்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றதற்கு சமமாக கருதப்படும்).
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள்.
கடந்த ஆறு மாதங்களில் கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள்.
மருத்துவ காரணங்களால் தங்களால் கொரோனா தடுப்பூசி பெற இயலாது என்பதைக் காட்டும் மருத்துவர் அளித்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள்.
விடயத்துக்கு வருவோம்...
நாளை முதல், அதாவது டிசம்பர் 15, புதன்கிழமை முதல், முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என்ற வார்த்தைக்கான விளக்கத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
டிசம்பர் 15 முதல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், (பைசர், மொடெர்னா மற்றும் ஆஸ்ட்ராசெனகா), பூஸ்டர் தடுப்பூசி பெறாவிட்டால், அவர்களுடைய சுகாதார பாஸ் செயலிழந்துவிடும். அதாவது, அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள்.
பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி என்னவென்றால், கடைசியாக நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றது அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதிலிருந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தால் நீங்கள் பூஸ்டர் டோஸ் பெறலாம்.
நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றது அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதிலிருந்து ஏழு மாதங்களுக்குப் பிறகே சுகாதார பாஸ் செயலிழக்கும்.
உதாரணமாக, நீங்கள் 65 வயதைக் கடந்தவர் என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் மே மாதம் 25ஆம் திகதி உங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றீர்கள் என்றால், உடனடியாக நீங்கள் பூஸ்டர் டோஸ் பெறவேண்டும். இல்லையென்றால், உங்கள் சுகாதார பாஸ் கிறிஸ்துமஸ் தினத்தன்று செயலிழந்துவிடும், அதாவது காலாவதியாகிவிடும். அதாவது, அன்றுடன் நீங்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்று ஏழு மாதங்கள் முடிவடைந்து விடுகின்றன.
நாளை முதல் அவர்கள் சுகாதார பாஸ் பயன்படுத்தவேண்டுமானால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள், அவர்கள் தடுப்பூசி பெற்றதிலிருந்து ஒரு மாதம் சென்றபின் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறலாம்.
அத்துடன், அவர்கள் தடுப்பூசி பெற்றுகொண்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டால்தான் அவர்களது கொரோனா சுகாதார பாஸ் செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.