கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் தகுதியுடையவரா என்பதைக் கூறும் விதிமுறைகள் என்னென்ன?
ஒருவர் கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு தகுதியுடையவரா என்பது குறித்து கணக்கிடுவதற்கான முதல் விடயம், அவர் ஏற்கனவே நிரந்தர வாழிட உரிமம் பெற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது கனடாவில் வாழ்ந்துள்ளாரா என்பதுதான்.
ஏனென்றால், நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெற்று கனடாவில் வாழும் நாட்கள் மட்டுமே, நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிம்போது, முழு நாட்களாக கணக்கிடப்படும் என்னும் விதி ஒன்று உள்ளது.
அதாவது, நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெறும் முன், தற்காலிக வாழிட உரிமம் பெற்று கனடாவில் வாழ்ந்த ஒவ்வொரு நாளும், அரை நாளாகத்தான் கணக்கிடப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
மேலும், கனேடிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் நீங்கள் கனடாவில் வாழ்ந்துவந்தீர்களா என்பதைத்தான் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகள், நிரந்தர வாழிட உரிமம் பெற்று கனடாவில் வாழ்ந்துவந்திருந்தால், தற்காலிக வாழிட உரிமம் பெற்று வாழ்ந்த நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு முன் தற்காலிக வாழிட உரிமம் பெற்று கனடாவில் வாழ்ந்திருக்காதபட்சத்தில், நீங்கள், குறைந்தபட்சம் 1,095 நாட்கள், அல்லது மூன்று ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்திருக்கவேண்டும்.
எப்படி ஆனாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் தேவையான நாட்களை விட, சற்று அதிக நாட்கள் வாழ்ந்ததை உறுதி செய்தபின் நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது, நாட்களைக் கணக்கிடும்போது, தவறுகள் வராமல் தவிர்க்க உதவலாம். அதையே கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும் வலியுறுத்துகிறது.
கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வேறு என்னென்ன தகுதிகள் தேவை?
மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தவிர்த்து, கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
- கனேடிய சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும். நீங்கள் 18 வயதுக்கும் 54 வயதுக்கும் இடையில் உள்ளவர் என்றால், மொழிப்புலமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
- குடியுரிமை கோரும் ஒருவருக்கு குற்றப்பின்னணி இருக்கக்கூடாது.
- கனேடியர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், கனடாவின் புவியியல், அரசியல் அமைப்பு மற்றும் வரலாறு குறித்தும் நீங்கள் அறிந்துவைத்திருக்கவேண்டும்.
- நீங்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது வரி செலுத்தியிருக்கவேண்டியிருக்கலாம்.
- அத்துடன், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கு, முறைப்படி விண்ணப்பம் செலுத்துவதுடன், அரசு பரிசீலனைக் கட்டணம் மற்றும் குடியுரிமை உரிமைக் கட்டணமும் செலுத்தவேண்டும்.
- இந்த தகுதித்தேவைகள் எல்லாவற்றையும் நீங்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில், நீங்கள் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், 18 வயது முதல் 54 வயது வரை உள்ளவர்கள் குடியுரிமைத் தேர்வு எழுதவேண்டியிருக்கும்.
- அதற்குப் பிறகு, குடியுரிமை பெறும் விழாவில் பங்கேற்று, கனேடிய குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழைப் பெற்று, குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.
இவ்வளவும் முடித்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் அதிகாரப்பூர்வ கனேடிய குடிமக்களாகிவிடுவீர்கள்!