உங்கள் மொபைல் போன் Hack செய்யப்பட்டிருக்கலாம்! இந்த 10 அறிகுறிகள் தென்பட்டால் உஷார்!
செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது என்பது குறித்து பார்ப்போம்.
தற்போதைய காலக்கட்டத்தில், பிற நபர்கள் நமது செல்போன்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வம் இத்தகைய ஹேக் நிகழ்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தனி நபர்களின் அந்தரங்கங்களை அறிந்துகொண்டு அவற்றை வைத்து அவர்களை மிரட்டி தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.
பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை ஹேக் செய்து, ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் சமீப காலமாக பதிவாகி வருகிறது. ஹேக் செய்வதற்காக நமது செல்போனில் ஊடுருவும் இத்தகைய செயலிகளை கண்டுபிடிப்பது என்பது எளிதானது அல்ல.
எனினும் சில அறிகுறிகள் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா அல்லது உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
1) செல்போன் பேட்டரி விரைவாக தீரும் (Draining of battery)
ஒரு நாள் , 2 நாள் சார்ஜ் நிற்கும் உங்கள் செல்போனில் அண்மை காலமாக பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறதா? ஆம், என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செல்போனில் பேட்டரி விரைவாக தீர்ந்துபோவது அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதன் அறிகுறியே. எனினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, வேறு செயலிகள் எதாவது பின்னணியில் இயங்கிகொண்டிருக்கிறதா என்பதையும் ஆராயுங்கள். பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக்கொண்டிருந்தாலும் செல்போனின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும்.
2) பதிவிறக்கம் செய்யாத செயலிகள் செல்போனில் இருப்பது (Unrecognised apps)
செல்போனை பயன்படுத்தும்போது நீங்கள் பதிவிறக்கம் செய்யப்படாத செயலிகள் எதாவது உங்கள் செல்போனில் இருப்பதை பார்த்திருக்கலாம். இதுவும் ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம்.
3) செல்போனின் செயல்பாடு மந்தமாதல் (Poor performance)
செல்போனில் வேகம் திடீரென குறையும். சில சமயங்களில் செல்போன் தானாகவே அணைந்து ரீ-ஸ்டார்ட் ஆகும், சில சமயம் ஹேங் ஆகும். இதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்.
4) மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்தல் (Exponentially high data usage)
நீங்கள் உங்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்பதும் ஹேக்கின் அறிகுறிதான். இதற்கு காரணமாக உங்கள் செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் இந்தளவு அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம்.
5) செல்போனின் செயல்பாட்டில் விசித்திரம் (Mobile Performs unusual)
உங்கள் செல்போன் விசித்திரமாக செயல்படக் கூடும். செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் எடுக்கலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாகத் காணப்படும்.
6) விசித்திரமான பாப்-அப்கள் (Inappropriate pop-up)
உங்கள் செல்போன் திரையில் ஏராளமான பாப்-அப் (Pop-up) தோன்றுவதை நீங்கள் பார்த்திருந்தால், அதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறிதான். ஏராளமான விளம்பர லிங்க்கள் உங்கள் திரையில் தோன்றும். இத்தகைய லிங்க்களை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்துவிட வேண்டாம்.
7) கேலரியில் மாற்றம் (Strange Images And Videos in Gallery)
நீங்கள் எடுக்காக புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உங்கள் செல்போன் கேலரியில் இருக்கக் கூடும். உங்கள் செல்போன் கேமரா வேறு ஒரு நபரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்பதன் அறிகுறி இது என்பதால் மிக கவனமாக இருங்கள்.
8) ஃப்ளாஷ் லைட் (Automatic Falsh Light function)
நீங்கள் செல்போனை பயன்படுத்தாத போதும் அதன் ஃபளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா? உங்கள் செல்போன் வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதன் அறிகுறி இது.
9) அதிக உஷ்ணம் (Mobile Over Heat)
நீண்ட நேரம் விளையாடும் போது, வீடியோ பார்க்கும்போது செல்போன் உஷ்ணம் ஆவது என்பது இயல்புதான். ஆனால், நீங்கள் பயன்படுத்தாதபோதே உங்கள் செல்போன் அதிக உஷ்ணம் ஆகிறது என்றால், செல்போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
10) குறுஞ்செய்திகள், அழைப்புகள் (Calls, messages you have not initiated / No calls or messages)
நீங்கள் மேற்கொள்ளாத அழைப்புகள், நீங்கள் அனுப்பாத குறுஞ்செய்திகள் ஆகியவை உங்கள் செல்போனில் காணப்பட்டால், அவையும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியே ஆகும். அதேபோல், உங்கள் போனுக்கு எந்த அழைப்பும், குறுஞ்செய்தியம் வராமல் இருந்தாலும் உடனடியாக அதை கவனிக்கவும்.