இனி காவல்நிலையம் செல்லாமலே புகார் அளித்து CSR பெறலாம் - தமிழக காவல்துறை திட்டம்
how to get ecsr without visit police station: தமிழ்நாட்டில், காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்கள் முறையாக பெறப்படுவதில்லை, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என அவ்வப்போது புகார்கள் வந்தவண்னம் இருந்தது.
இந்நிலையில், காவல்நிலையம் செல்லாமலே ஆன்லைன் மூலம் அளிக்கும் புகார்கள் மீது சிறிது நேரத்தில் இ-சிஎஸ்ஆர் வழங்கப்படும் திட்டத்தை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் e-CSR
ஏற்கனவே ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதி இருந்தாலும், CSR பெறுவதற்கு காவல் நிலையம் செல்ல வேண்டி இருந்த நிலையில், தற்போது அதனையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று இணையவழிச் சேவைகள் (Citizen Services) பிரிவில் "Register Complaint / CSR Online" அல்லது e-CSR என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து புகார் அளிக்க வேண்டும்.
புகார் அளிப்பவரின் விவரங்கள், சம்பவம் நடந்த இடம், திகதி மற்றும் புகாரின் தன்மை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உங்கள் பகுதி எந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்று தெரியாவிட்டால், பட்டியலில் உள்ள உங்கள் மாவட்டம் அல்லது நகரத்தை மட்டும் சரியாகத் தேர்வு செய்து புகாரை சமர்ப்பிக்க வேண்டும்.
மக்கள் சேவையில் மற்றுமொரு டிஜிட்டல் முன்னெடுப்பாக, தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-CSR சேவை மூலம், பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தே இணையவழியில் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR ரசீதையும் எளிதாகப் பெறலாம். இச்சேவை குறித்த விழிப்புணர்வுக் காணொளி! #TamilNaduPolice #eCSR #DigitalPolicing #OnlineComplaint #PublicService #TNPolice
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 18, 2026
புகார் பதிவு செய்யப்பட்டவுடன், அது தானாகவே e-CSR ஆகப் பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்குத் தனித்துவமான e-CSR எண் கொண்ட மின்னணு ஒப்புகை உடனடியாக குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.
பின்னர், அந்த e-CSR சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடவடிக்கை தொடங்கப்படும்.
புகாரில் காவல் நிலையம் குறிப்பிடப்படவில்லை எனில், அந்தப் புகார் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் Moderatorக்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் விசாரணைக்காக உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
சரிபார்ப்பு மற்றும் மேல் நடவடிக்கைக்காக, புகார் அளித்தவர் 3 நாட்களுக்குள் தேவையான ஆதார ஆவணங்களுடன் செல்ல வேண்டிய காவல் நிலையத்தின் பெயர் குறித்த தகவல், மற்றொரு குறுஞ்செய்தி (SMS) மூலம் அவருக்குத் தெரிவிக்கப்படும்.
விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், வழக்கமான CSR பதிவு செய்வது /முதற்கட்ட விசாரணை நடத்துவது / முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது அல்லது உரிய காரணங்களுடன் புகாரை முடித்து வைப்பது போன்ற சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
மேலும், புகாரின் ஒவ்வொரு நிலையையும் 'Citizen Portal' மூலம் ஆன்லைனிலேயே கண்காணித்துக் கொள்ளலாம்.
இதன் மூலம், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாக காவல்துறையை அணுக முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு e-CSRம் உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
ஆனால், இந்த e-CSR அவசரகால சேவைக்கானது அல்ல. அவசரத்திற்கு 100 அல்லது 112ஐ அழைக்க வேண்டும். பெண்கள் 1091 என்ற சிங்கப்பெண் சிறப்பு காவல் படை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.