சுவிஸ் குடியுரிமை பெறுவது எப்படி? பயனுள்ள சில தகவல்கள்
சுவிஸ் குடியுரிமை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளன
1. சாதாரண வழிமுறை மற்றும் 2. எளிமையாக்கப்பட்ட வழிமுறை.
பெரும்பாலானவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பயன்படுத்துவது, சாதாரண அல்லது வழக்கமான குடியுரிமை பெறும் முறைமையாகும்.
அடுத்ததாக, எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமை என்பது குறுகிய கால, மற்றும் சிக்கல் குறைவான ஒரு முறைமை. அது, சுவிஸ் குடிமக்களின் வெளிநாட்டவர்களான கணவர் அல்லது மனைவி மற்றும் சுவிஸ் குடிமக்களின் குழந்தைகளுக்கானது. மேலும், 2017 முதல் மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்களுக்கானதும் கூட.
சுவிஸ் நாட்டவர்களின் கணவர் அல்லது மனைவியான வெளிநாட்டவருக்கான எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமையைப் பொருத்தவரை, உங்களுக்குத் திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும், மேலும், நீங்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.
மூன்று மட்டங்களிலான விதிமுறைகள்
வழக்கமான முறையில் குடியுரிமை பெற, ஒரு வெளிநாட்டவர், அரசு விதித்துள்ள மூன்று மட்டங்களிலான விதிமுறைகளுக்கு உட்படவேண்டும். அவையாவன, நகராட்சி, மாகாணம் மற்றும் பெடரல் மட்டம்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி பெடரல் வெளிநாட்டவர்களின் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர், சுவிட்சர்லாந்தில் குறைந்தது 10 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கவேண்டும் (முன்பு இது 12 ஆண்டுகளாக இருந்தது). பதின்ம வயதிலேயே நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலோ, அல்லது சுவிஸ் நிரந்தர குடியிருப்பு அனுமதி (C residence permit) வைத்திருப்பவர்களாகவோ இருந்தால், அதற்கும் குறைவான காலம் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் போதும்.
குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், சுவிஸ் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும், அவர்களால் நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர்கள் சுவிஸ் மக்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து வாழ்கிறவர்களாகவும் இருப்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். விளக்கமாகச் சொன்னால், நீங்கள் சுவிஸ் பொருளாதார, சமூக மற்றும் மொழிசார் விடயங்களில் பங்கெடுப்பவராக இருக்கவேண்டும் என்பது அதன் பொருள்.
ஒருவர் எந்த அளவுக்கு சுவிட்சர்லாந்து மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்கிறார் என்பதை பெடரல் அதிகாரிகளுக்கு சொல்வது மாகாண மற்றும் நகராட்சி அதிகாரிகளின் வேலையாகும். ஆனால், புதிய பெடரல் சட்டமோ, இன்னும் கூடுதல் விடயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறது. அதாவது, நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதை, நீங்கள் ஊக்குவிக்கவேண்டும் என அது எதிர்பார்க்கிறது.
நீங்கள் சமீபகாலத்தில் அரசு உதவி பெற்றவர்களாக இருந்தால், உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது
2018ஆம் ஆண்டில் மற்றொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டது. அதாவது, நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் உதவியை பெற்றிருந்தால், நீங்கள் இதுவரை பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தினாலொழிய, உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இயலாது.
அரசு உதவி பெறுவது, குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் ஒருவர், பணி செய்வதன் மூலமோ அல்லது பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலமோ சுவிஸ் அரசுக்கு தன் பங்களிப்பைச் செய்திருக்கவேண்டும் என்ற விடயத்துக்கு எதிரானதாக கருதப்படுகிறது.
நீங்கள் வாழும் மாகாணத்தில் நீங்கள் எவ்வளவு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிக முக்கியமான காரணியாகும்
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பத்து ஆண்டுகள் வரை கூட வாழ்ந்திருக்கலாம். ஆனால், இப்போது வாழும் மாகாணத்தில் எவ்வளவு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். மற்றொரு மாகாணத்துக்கோ அல்லது நகராட்சிக்கோ குடிபெயர்ந்து அங்கு நீங்கள் குடியுரிமை கோர முடியாது. இது தொடர்பில் ஒவ்வொரு மாகாணமும் தனக்கென தனிப்பட்ட விதிகளைக் கொண்டுள்ளது. என்றாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கவேண்டும் என அனைத்து மாகாணங்களுமே எதிர்பார்க்கின்றன.
நீங்கள் உள்ளூர் மொழியில் பேசுவது கட்டாயம்
சுவிஸ் குடியுரிமை கோர மொழித்திறன் மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த தகுதியும் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும். ஆனால், 2018இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர் உள்ளூர் மொழியில் எழுதுவதில் A2 மட்டத்திலும், பேசுவதில் B1 மட்டத்திலும் மொழித்திறன் பெற்றிருக்கவேண்டும்.
உங்கள் தாய்மொழி சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றாக் இருந்தாலோ, அல்லது சுவிட்சர்லாந்தில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்திருந்தாலோ அல்லது சுவிஸ் தேசிய மொழி ஒன்றில் secondary school leaving certificate அல்லது tertiary qualification முடித்திருந்தாலோ, மொழித்திறனை நிரூபிப்பதிலிருந்து உங்களுக்கு விலக்களிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மாகாண மற்றும் நகராட்சி விதிகள் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படும்
நீங்கள் வாழும் பகுதியில், நீங்கள் அங்குள்ள மக்களுடன் எந்த அளவுக்கு இணைந்து வாழ்கிறீர்கள் என்பதற்கான தகுதித் தேவைகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
உள்ளூர் மக்களும் உங்களுக்காக வாக்களிக்கலாம்
நீங்கள் ஓரிடத்தில் எப்படி ஒருங்கிணைந்து வாழ்கிறீர்கள் என்பதை அறிய நேர்காணல் இருக்கும் அதே நேரத்தில், சில இடங்களில் உள்ளூர் மக்களின் கமிட்டி கூடி உங்கள் விண்ணப்பம் குறித்து வாக்களிக்கவும் நேரலாம்.
உங்கள் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட சிறிது காலமாகலாம்
நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் கால அளவு மாறுபடும். அது சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
குடியுரிமைக்காக நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
குடியுரிமை வழங்குதல் தொடர்பான விடயங்களை மூன்று மட்டத்தில் அதிகாரிகள்அணுகுவதால், குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் மூன்று வகையான கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கும். சுவிஸ் பெடரல் மட்டத்தில் 50 முதல் 150 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண மற்றும் நகராட்சி கட்டணங்கள் இன்னமும் அதிகமாக இருக்கலாம்.
நகராட்சி மட்டத்தில் 500 முதல் 1,000 ஃப்ராங்குகளும், மாகாண மட்டத்தில் 2,000 ஃப்ராங்குகள் வரையும் விண்ணப்பத்திற்காக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
உங்கள் குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது, நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையலாம்
குறிப்பாக, மேற்கு சுவிட்சர்லாந்தில், மற்ற பகுதிகளை விட குடியுரிமை பெறுவது சற்று எளிது என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, இரட்டைக் குடியுரிமையையும் அனுமதிக்கிறது
சுவிஸ் குடிமக்கள் இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். பலர் அவ்வாறு வைத்துமிருக்கிறார்கள். சொல்லப்போனால், சுவிட்சர்லாந்தில் வாழும் ஆறு பேரில் ஒருவர் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |