2022இல் கனடாவுக்கு புலம்பெயர்வது எப்படி?: சில பயனுள்ள தகவல்கள்
2022இல் கனடாவுக்கு புலம்பெயரும் திட்டம் உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு உதவும் சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கனடாவுக்கு புலம்பெயர்வதற்கான, எக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry), மாகாண நாமினி திட்டம் (Provincial Nominee Program - PNP), கியூபெக் புலம்பெயர்தல் திட்டம் (Quebec immigration) மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்யும் திட்டம் (family sponsorship) ஆகிய திட்டங்கள் குறித்த சில தகவல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மையில், கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்தல் திட்டங்கள் உள்ளன.
ஆனால், பயணம் புறப்படுதற்கு முன், அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளைக் குறித்து தெரிந்துகொண்டு, பயணத்துக்கு திட்டமிடுவது நல்லது.
எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம்
கனடாவைப் பொருத்தவரை எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம்தான் முக்கிய புலம்பெயர்தல் வழிமுறையாகும். மூன்று பொருளாதார வகுப்பு புலம்பெயர்தல் திட்டங்கள் அதன் கீழ் வருகின்றன.
அவையாவன, கனேடிய அனுபவ வகுப்பு திட்டம் (Canadian Experience Class), பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டம் (Federal Skilled Worker Program) மற்றும் பெடரல் திறன்மிகு வர்த்தகர் திட்டம் (Federal Skilled Trades Program) ஆகியவையாகும்.
இந்த திட்டங்களில் எதற்காவது விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவரானால், எக்ஸ்பிரஸ் நுழைவு சார் மாகாண நாமினி திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். (மேலதிக விவரங்களை செய்தியின் இறுதியிலுள்ள இணைப்பிலிருந்து அறிந்துகொள்வது பயனளிக்கும்)
மாகாண நாமினி திட்டம்
எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டத்திற்கு தகுதி பெறாதவர்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டத்திற்கு கூடுதல் புள்ளிகள் பெற விரும்புவோர் மாகாண நாமினி திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Nunavut மற்றும் கியூபெக் தவிர்த்து மற்ற மாகாணங்கள் அனைத்திலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.
மாகாண நாமினி திட்டம் ஒரு இரண்டடுக்கு விண்ணப்ப திட்டமாகும். அதாவது, நீங்கள் முதலில் மாகாண திட்டத்துக்கு விண்ணப்பியுங்கள். நீங்கள் நாமினேட் செய்யப்பட்டால் பெடரல் அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.
கியூபெக் புலம்பெயர்தல் திட்டம்
அதிகம் பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமாகிய கியூபெக்குக்கென தனியாக புலம்பெயர்தல் திட்டம் உள்ளது. (மேலதிக விவரங்களை செய்தியின் இறுதியிலுள்ள இணைப்பிலிருந்து அறிந்துகொள்வது பயனளிக்கும்)
குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்தல்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது கனடாவில் வசித்துவந்தால், நீங்கள் இத்திட்டத்தால் பயனடையலாம். கனேடியர்கள் தங்கள் துணைவர்கள் தங்களை சார்ந்திருக்கும் பிள்ளைகள் அல்லது உறவினர்கள், பெற்றோர், தாத்தா பாட்டி, ஆகியோரை ஸ்பான்சர் செய்யலாம். சில விதிவிலக்குகளின்படி வேறு குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்யவும் வழிவகை உள்ளது.
முக்கிய விடயம், பணம்... பண உதவி செய்யும் நிலையில் இருப்பது, குற்றச்செயலில் ஈடுபடாமல் இருப்பது, மருத்துவ பரிசோதனைகளில் வெற்றிபெறுவது ஆகியவை மிகவும் அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டத்துக்கும் தகுதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அதுபோல, நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்பதைப் பொருத்தும் விதிகள் மாறுபடும். அதற்கேற்றாற்போல் ஆவணங்களும் தேவைப்படும். விதிகளை அறிந்துகொள்ள கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தை பார்வையிடுவது நல்லது.
மேலதிக தகவல்களுக்கு - https://www.cicnews.com/2022/01/how-to-immigrate-to-canada-in-2022-0120582.html#gs.kloae0