புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை காரக்குழம்பு... வெங்காயம் தக்காளியே வேண்டாம்
Peanut Kara Kuzhambu: வேர்க்கடலை காரக்குழம்பு வெங்காயம் தக்காளி இல்லாமல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான இல்லத்தரசிகளின் முக்கிய பிரச்சனை என்பது மதிய உணவு சமைப்பது தான். வாரத்தின் ஏழு நாட்களுக்கு வித்தியாசமான குழம்பு வைப்பது கஷ்டமாகவே தெரிகின்றது.
வழக்கம் போல் சாம்பார், குருமா, ரசம், புளிக்குழம்பு இவ்வாறு வைப்பது வழக்கம். புளிக்குழம்பு வைப்பதற்கு பெரும்பாலும் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, வெங்காயம் என இந்த காய்கறிகளை தான் உபயோகப்படுத்துவோம்.
ஆனால் புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையைக் கொண்டு காரக்குழம்பு செய்வது என்பது சற்று வித்தியாசமான உணவாகும். அந்த வகையில் வெங்காயம் தக்காளி இவற்றை சேர்க்காமல் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
புளி கரைசல் - ½ கப்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
கடலைப் பருப்பு - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
வெல்லம் - ½ ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைக்க
வர மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
மல்லி விதைகள் - ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் நிலக்கடலையை தோல் நீக்கி, வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவுமு். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்ககாமல் மல்லி விதை, வரமிளகாய், துருவிய தேங்காய் இவற்றினை வறுத்து மிக்ஸியில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும். இதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் இவற்றினை சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் வேக வைத்த வேர்க்கடலை மற்றும் உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்களை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதனுடன் புளிகரைசலையும் சேர்த்துக் கொள்ளவும்.
சற்று கொதித்த உடன் வெல்லம், வறுத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் சுவையான வேர்க்கடலை காரக் குழம்பு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |