புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா கொடுக்கும் பெருந்தொகை: பிரான்ஸ் அதை எப்படி பயன்படுத்தப்போகிறது?
புலம்பெயர்வோர் படகுகள் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, பிரான்சுக்கு பிரித்தானியா பெருந்தொகை ஒன்றை வழங்க உள்ளது.
எவ்வளவு வழங்கப்பட உள்ளது?
புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகியுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியா பிரான்சுக்கு 72.2 மில்லியன் யூரோக்கள் வழங்க உள்ளது.
இந்த தொகையை பிரான்ஸ் எப்படி பயன்படுத்தப்போகிறது?
பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் இணைந்து ரோந்து செல்ல இருக்கிறார்கள்.
முன்பிருந்ததைவிட பொலிசாரின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. அதாவது, இனி கூடுதலாக 100 அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறார்கள்.
முதன்முறையாக, ஆங்கிலக்கால்வாயின் இரண்டு கரைகளிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
image - Photo by Sameer Al-DOUMY / AFP
ஓராண்டுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையில் சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்ட நிலையில், பிரான்ஸ் தரப்பில் ரோந்து செல்லும் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பது முதலான நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே பிரித்தானியா பிரான்சுக்கு 63 மில்லியன் யூரோக்கள் வழங்கியது.
இப்போது புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், கட்டமைப்பு, ட்ரோன்கள் முதலான நவீன தொழில்நுட்பம், முதலானவை பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், இப்போது பிரித்தானியா வழங்கியுள்ள தொகையின் ஒரு பகுதி, பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்று பிடிப்பட்ட புலம்பெயர்வோர் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வதைத் தடுப்பதற்காக அவர்களை தங்கவைக்கும் மையங்களை பிரான்சில் அமைப்பது போன்ற விடயங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.