சென்னையில் இன்று மழை எப்படி இருக்கும்? தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் மழை நிலவரம்
தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தீவிர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை இன்று அடையும். இது, புயலாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையை நோக்கி மேகங்கள் வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அரபிக்கடலுக்கு சென்றபிறகு மழை குறையும்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ளது. இதனை பெங்கல் புயலுடன் ஒப்பிட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |