ரஷ்யா உக்ரைன் போர் சுவிட்சர்லாந்தின் மீது எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?
உலகின் எந்த பகுதியில் போர் ஏற்பட்டாலும், அது பல நாடுகள் மீது, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு முதல் உணவுத்தட்டுப்பாடு வரையிலான பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், ரஷ்ய ஊடுருவல் சுவிட்சர்லாந்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா? எவ்வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில் என்னவென்றால், சுவிட்சர்லாந்து பிரச்சினைக்குரிய பகுதிகளிலிருந்து கிடைக்கும் எந்த வித அத்தியாவசிய பொருட்களையும் நம்பியிருக்கவில்லை என்பதால், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதால் சுவிட்சர்லாந்தின் மீதான தாக்கம் மிகக் குறைவே!
சுவிட்சர்லாந்துடனான மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் பட்டியலில் ரஷ்யா 34ஆவது இடத்தில்தான் உள்ளது.
ஆனால், யுத்தத்தால் மறைமுகமாக பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் தேசிய பெடரல் பொருளாதார வழங்கல் அலுவலக செய்தித்தொடர்பாளரான Thomas Grünwald. அதாவது, சர்வதேச உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மறைமுகமாக பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
ஆனால், அப்படி ஒரு நிலைமை உருவானாலும், சுவிஸ் அரசு அவசர காலத் தேவைக்காக பொருட்களை சேமித்து வைத்துள்ளது. அது மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் போதுமானது.
அந்த சேமிப்பில், சர்க்கரை, அரிசி, உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் விவசாயத்துக்கான உரம் முதலான பொருட்களும் கால்நடைத்தீவனங்களும் அடங்கும்.
ஆற்றலுக்காக எந்த அளவுக்கு சுவிட்சர்லாந்து ரஷ்யாவை நம்பியுள்ளது?
ரஷ்யா, மிகப்பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடாகும். இருந்தபோதிலும், போரால் சுவிட்சர்லாந்துக்கு ஏற்படும் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கப்போவதில்லை.
சுவிட்சர்லாந்துக்கான பெட்ரோலியம் தேவையில் சுமார் கால் பங்கு சுவிட்சர்லாந்திலிருந்தே கிடைக்கிறது, நாட்டின் கச்சா எண்ணெய் பெருமளவில் அமெரிக்க, நைஜீரியா மற்றும் லிபியாவிலிருந்து வரும் எண்ணெயால்தான் சந்திக்கப்படுகிறது, ரஷ்யாவின் பங்களிப்பு குறைவே!
மீதமுள்ள 75 சதவிகித பெட்ரோல் தேவையைப் பொருத்தவரை, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் இறக்குமதியில் பெருமளவு, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலிருந்து வருகிறது.
விடயம் என்னவென்றால், எண்ணெய்க்காக சுவிட்சர்லாந்து ரஷ்யாவை குறைந்த அளவே சார்ந்திருந்தாலும், எரிவாயுக்காக அது பெருமளவில் ரஷ்யாவை நம்பியுள்ளது!
சுவிட்சர்லாந்து தனது எரிவாயுவை பெருமளவில் பல்வேறு ஐரோப்பிய விநியோக மையங்கள் வாயிலாக வாங்குகிறது. ஆனாலும், அதில் 47 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்துதான் வருகிறது.
இதனால் பிரச்சினை உள்ளது என்பதுபோல தோன்றினாலும், ரஷ்யா தனது எரிவாயு வழங்கலை நிறுத்தாது என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதுபோக, ரஷ்யாவிலும் உக்ரைனிலும் செயல்படும் சுவிஸ் நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
ஆக, தற்போதைய சூழலில், போரால் சுவிட்சர்லாந்துக்கு பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.