கனடாவுக்கு கணவர் அல்லது மனைவி புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் புலம்பெயர திட்டமிட்டுள்ளோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
கனடாவைப் பொருத்தவரை, கணவர் அல்லது மனைவி மூலம் ஸ்பான்சர் செய்யப்படுவது முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு விடயமாகும்.
2022-2024ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் திட்டத்தின்கீழ், கனடா அரசு ஆண்டொன்றிற்கு 80,000 புதிய புலம்பெயர்வோரை, கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிவின்கீழ் வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.
உங்கள் கணவர் அல்லது மனைவி ஒரு கனேடிய குடிமகனாக அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டவராக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு அவர்கள் உங்களை ஸ்பான்சர் செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கனடாவின் கணவர் அல்லது மனைவி ஸ்பான்சர் திட்டத்திற்கான நடைமுறை
கனடாவின் கணவர் அல்லது மனைவி ஸ்பான்சர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு, நீங்களும் உங்கள் துணையும் சில தகுதிநிலைகளுக்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியம் ஆகும்.
உங்கள் இருவருக்கும் இடையில் சரியான கணவன் மனைவி உறவு இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். அத்துடன், நீங்கள் கனேடிய நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்காக மட்டுமே உங்கள் துணையுடன் உறவிலிருப்பவராக இருக்கக்கூடாது.
கனடாவுக்கு ஸ்பான்சர் செய்யப்படுவதற்கு, உங்கள் கணவர் அல்லது மனைவி கனடாவில்தான் இருந்தாகவேண்டும் என்ற அவசியம் இல்லை. கனேடிய குடிமக்கள் வெளிநாட்டில் இருந்தபடியும் தங்கள் துணைக்காக ஸ்பான்சர் செய்ய விண்ணப்பிக்கலாம். ஆனால், நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்பவர்கள், உங்கள் துணைவர் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், நீங்கள் கனடாவில் இருந்தவண்ணம்தான் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
உங்கள் துணைவருக்கு ஸ்பான்சர் செய்வதற்கான தகுதிநிலைகள் என்னென்ன?
கீழ்க்கண்ட தகுதிநிலைகள் கொண்ட கனேடிய குடிமக்களும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களும் தங்கள் துணைவரை ஸ்பான்சர் செய்யலாம்.
உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்கவேண்டும்
நீங்கள் ஒரு கனேடிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டவராகவோ அல்லது கனேடிய இந்தியச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட பூர்வக்குடியினராகவோ இருக்கவேண்டும்.
உங்கள் துணைவர் அரசின் உதவி பெறவில்லை என்பதை நிரூபிக்கவேண்டும் (அவர் உடற்குறைபாடு கொண்டவராக இருந்தாலன்றி).
உங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் உங்கள் துணைவரின் பணத்தேவைகளை உங்களால் சந்திக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும்.
ஸ்பான்சர் செய்யப்படுபவருக்கான தகுதிநிலைகள் என்னென்ன?
உங்களுக்கும் உங்களுக்கு ஸ்பான்சர் செய்பவருக்கும் இடையில் சரியான உறவுமுறை இருப்பதை நிரூபிக்கவேண்டும்.
உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்கவேண்டும்.
நீங்கள் மருத்துவ, பாதுகாப்பு மற்றும் குற்றவியல் பின்னணி குறித்த சோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டும்.
கணவர் அல்லது மனைவி ஸ்பான்சர் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீங்களும் உங்கள் துணைவரும் ஸ்பான்சர் திட்டத்துக்குத் தகுதியானவர்கள் என நிரூபித்த பின், அரசின் இணையதளத்தில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் விண்ணப்ப படிவத்தைப் பெறலாம். உரிய கட்டணம் செலுத்தி, ஒரு ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பம் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம்.
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டபின் என்ன நடக்கும்?
உங்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் கிடைத்தாலும், சில நிபந்தனைகளை நீங்கள் இருவரும் நிறைவேற்றவேண்டியிருக்கும்.
உங்கள் கனேடிய துணைவர், முன்று ஆண்டுகளுக்கு உங்கள் பணத்தேவைகளை சந்திக்கவேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அரசின் உதவியைக் கோரினால், உங்கள் துணைவர் அந்த தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கும்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட நீங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இன்னொரு துணைவரை ஸ்பான்சர் செய்யமுடியாது!