வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறையை எளிதாக்க விரும்பும் சுவிஸ் நகரம் ஒன்று: விவரம் செய்திக்குள்...
உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினம் என்பது பலரும் அறிந்த ஒரு விடயம்.
ஆனால், சுவிஸ் மாகாணம் ஒன்று, அந்த விடயத்தை மாற்ற விரும்புகிறது.
ஆம், சூரிச் மாகாணம், வரும் 15ஆம் திகதி, வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்குவது தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளது.
அந்த வாக்கெடுப்பில், சுவிஸ் குடியுரிமை பெற விரும்பும் இளைஞர்களுக்கு கட்டணத்தைக் குறைத்தல், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான காத்திருக்கும் காலகட்டத்தை அதிகரித்தல் மற்றும் குடியுரிமை நடைமுறைகளை ஒன்லைனுக்கு மாற்றுதல் ஆகிய விடயங்கள் குறித்து பல கேள்விகள் இடம்பெற உள்ளன.
அதாவது, சுவிட்சர்லாந்தப் பொருத்தவரை, முதல் கட்ட சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறை, முனிசிபாலிடிக்கு முனிசிபாலிட்டி மாறுபடும்.
ஆகவே, அப்படி முனிசிபாலிட்டிக்கு முனிசிபாலிட்டி ஒவ்வொரு நடைமுறை என்று இருப்பதை, தற்போது சீராக, ஒரே மாதிரியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மலையேற்றத்தை விரும்பாதது, உள்ளூர் உயிரியல் பூங்காவைக் குறித்து அறிந்துவைத்திருக்காதது, சுவிஸ் சீஸ் பற்றி தெரியாதது ஆகிய விடயங்களெல்லாம் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடைகளாக இருந்த நிலையில், தற்போது, சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறையில், அடிப்படை அறிவு குறித்த தேர்வு, முனிசிபாலிட்டிக்கு முனிசிபாலிட்டி மாறுபடாமல், ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் முடிவு செய்யலாமா என மே 15 வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள்.
அதன்படி, அந்த அடிப்படை அறிவு குறித்த தேர்வில், 350 கேள்விகள் இடம்பெறும். அவை சுவிஸ் வரலாறு, பாரம்பரியம், அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளாக அமையும்.
தேர்வு எழுதுவோருக்கு 50 கேள்விகள் கொடுக்கப்படும், அவற்றில் 30 கேள்விகளுக்காவது சரியான பதில் எழுதவேண்டும்.
வேறு என்னென்ன விடயங்கள் வாக்களிப்பில் இடம்பெற உள்ளன?
18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர்கள் குடியுரிமை பெறுதலுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படுதல்.
குடியுரிமை நடைமுறைகளை ஒன்லைனுக்கு மாற்றுதல்.
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கான கட்டணத்தைக் குறைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். அதன் பிறகு வாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்ட விடயங்கள் சட்டமாக்கப்படும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த மாற்றங்களை ஆதரித்துள்ளன என்பதுதான்!