கிளென் மேக்ஸ்வெல் போல் இந்திய பெண்களை திருமணம் செய்த மற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்?
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தான் காதலித்து வந்த தமிழ்ப்பெண்ணான வினி ராமனை மார்ச் 18-ஆம் திகதியன்று திருமணம் செய்துகொண்டார். கிளென் மேக்ஸ்வெல் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்களது திருமண விழாவின் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
வினி ராமன் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். மெர்ல்போர்னில் மருந்தாளராக இருக்கும் அவர், மருத்துவமும் படித்துக் கொண்டிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு முதல் பழகி வந்த கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் இருவரும் பல பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வது வழக்கம்.
திருமண உடையில் கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்த மேக்ஸ்வெல், "காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் அதை முழுமையாக உணர்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
கிளென் மேக்ஸ்வெல் போலவே சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர்.
ஷோயிப் மாலிக்
இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்களில் ஷோயிப் மாலிக்கும் ஒருவர். பாகிஸ்தானின் மூத்த ஆல்-ரவுண்டரான ஷோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
Photo: Shoaib Malik Instagram
முத்தையா முரளிதரன்
இலங்கையின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்தியாவைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மதிமலர், சென்னையிலுள்ள மலர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார்.
Photo: Twitter
ஹஸ்ஸன் அலி
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்ஸன் அலியும் இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஹஸ்ஸன் 2019-ஆம் ஆண்டு துபாயில் இந்தியாவைச் சேர்ந்த சாமியா அர்ஜுவை மணந்தார்.
Photo: Hassan Ali Instagram
ஷான் டெய்ட்
கிளென் மேக்ஸ்வெல்லை போலவே, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர கிரிக்கெட் வீரரும் இந்திய பெண்ணை மணந்துள்ளார். அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் மற்றும் மாடல் அழகி மஷூம் சிங் உடன் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் மும்பையில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மைக் பிரேர்லி
இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் மைக் பிரேர்லியும் ஒருவர். அவர் 70-களின் பிற்பகுதியில் தொழிலதிபர் கௌதம் சாராபாயின் மகள் மனா சாராபாயை மணந்தார். லண்டனில் குடியேறி அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.Photo: Twitter
Courtesy: BBC News தமிழ்