பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயம்: நீதிமன்றம் செல்லும் மனித உரிமை அமைப்புகள்
‘One in, one out’ ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு மனித உரிமை அமைப்புகள் சில நீதிமன்றம் சென்றுள்ளன.
One in, one out திட்டம்...
பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் 26 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவரைக் காணவில்லை!
பிரான்சுக்கு அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயம்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் 26 பேரும், எரித்ரியா, ஈரான் போன்ற போர் அல்லது அரசியல் நிலைத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், அவர்களில் 25 பேர், அரசுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், பிரித்தானியா எங்களை திருப்பி அனுப்பிவிட்டது, நாங்கள் வந்துள்ள நாடோ எங்களுக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
பிரான்ஸ் எங்களுக்கு பாதுகாப்பற்ற, இடப்பற்றாக்குறையுடன் கூடிய தங்கும் இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில், எங்களுக்கு மருத்துவ உதவிகளோ, போதுமான உணவோ கூட கொடுக்கப்படவில்லை.
எங்கள் குடும்பத்தினர் பிரித்தானியாவில் இருக்கும் நிலையில், நாங்கள் அவர்களைப் பிரிந்து பிரான்சில் தனியாக தவிக்கிறோம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், நாங்கள் எந்த சொந்த நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்தோமோ, அதே நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவரைக் காணவில்லை. அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், ‘One in, one out’ ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி 15 பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்றுள்ளன.
ஆக, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்க பிரித்தானியா பிரான்சுடன் இணைந்து போட்ட திட்டம் வெற்றி பெற்று வருவதுபோலவே தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |