எங்களை சிறையிலடையுங்கள்... சுவிஸ் சிறை முன் குவிந்த நூற்றுக்கணக்கானோர்: ஒரு சுவாரஸ்ய சம்பவம்
சுவிஸ் சிறை ஒன்றிற்கு செல்ல 600க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், சூரிச்சில் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் பணிக்கு சேர்ந்துள்ள வார்டன்கள் முதல் ஊழியர்கள் பலரும் இப்போதுதான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே, சிறையை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு முன்பு, அந்த ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக, சோதனை முயற்சியாக தன்னார்வலர்களை வைத்து சிறை நடத்திப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, சிறைக்குச் செல்ல விரும்பும் சூரிச்சைச் சேர்ந்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்த வாரத் துவக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சிறையில், 241 கைதிகளை மட்டுமே அடைக்கும் வசதி உள்ள நிலையில், சிறைக்கு செல்ல விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை இப்போதே 600ஐத் தாண்டிவிட்டது.
இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், மூன்று வேளை அவரவருக்கு விருப்பமான நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு அமைதியாக ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் அவர்கள் நான்கு நாட்கள் சிறையில் தங்கவேண்டும். ஆனால், அதற்கு முன் யாராவது வெளியேற விரும்பினால், அவர்கள் வெளியேறவும் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் சிறைக்கு செல்லும் முன், தங்கள் மொபைல் முதலான மின்னணு உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.