பிரித்தானியாவை நெருங்கும் மூன்றாவது புயல்: மக்களுக்கு நூற்றுக்கணக்கான எச்சரிக்கைகள்
பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி Dudley என்னும் புயல் பிரித்தானியாவைப் புரட்டி எடுத்த நிலையில், அதன் தாக்கம் அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. அதன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 155,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், Franklin என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று பிரித்தானியாவைத் தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதனால், மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் கன மழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால், முடிந்தவரை பயணத்தை தவிர்க்குமாறு ரயில் நிறுவனங்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
வட அயர்லாந்துக்கு, காலை 7.00 மணி வரை, உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்பதைக் குறிக்கும் ஆம்பர் எச்சரிக்கையும், இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் தென்மேற்கு ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு மதியம் 1.00 மணி வரை மஞ்சள் எச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளன.
Franklin புயல் காரணமாக பிரித்தானியர்களுக்கு பலத்த காற்று மற்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை பரபரப்பாக மக்கள் இயங்கும் நேரம் பார்த்து நாட்டின் தென் பகுதி புயலால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஏஜன்சிகள் பிரித்தானியா முழுவதிலும் வாழும் மக்களுக்கு இரண்டு தீவிர எச்சரிக்கைகள் உட்பட, நூற்றுக்கணக்கான பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுத்துள்ளன. கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், Mersey நதியோரம் வாழும் மக்களுக்கு மழையால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.