சுவிஸ் பெண்ணை சீரழித்த நபருடைய தண்டனையை குறைத்த நீதிபதி... கொந்தளித்த மக்கள்: அஜீத் பட பாணியில் விவாதித்த சட்டத்தரணி
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை போர்ச்சுக்கீசியர்கள் இருவர் வன்புணர்ந்த வழக்கின் தீர்ப்பு சுவிட்சர்லாந்து மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளதால், நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்றத்தின் முன் கூடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சுவிஸ் இளம்பெண் ஒருவரை 17 மற்றும் 32 வயதுடைய இருவர், அவரது வீட்டின் அருகில் வைத்தே வன்புணர்ந்துள்ளனர்.
அந்த இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த 17 வயது இளைஞனுக்கு வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அந்த 32 வயதுடையவருக்கு 51 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த 32 வயது நபருடைய தண்டனையை 36 மாதங்களாக குறைத்து தீர்ப்பளித்தார். ஆனால், அவர் தண்டனையைக் குறைப்பதற்காக கூறியிருந்த காரணம் மக்களை, குறிப்பாக பெண்களை கொந்தளிக்கச் செய்தது.
பாதிக்கப்பட்ட பெண், வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு அந்த தாக்குதலால் நிரந்தர காயாங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த நீதிபதி தெரிவித்திருந்தார்.
அத்துடன், அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக சிக்னல் கொடுத்ததாகவும், நெருப்புடன் விளையாடியதாகவும் அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதாவது, சம்பந்தப்பட்ட பெண், இரவு விடுதிக்கு சென்றிருந்தபோது வேறொரு ஆணுடன் கழிவறைக்கு சென்றதாகவும், அதைப் பார்த்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதை சிக்னலாக எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், அவரை வன்புணர்ந்ததாகவும் அந்த நீதிபதி தெரிவித்தார்.
11 நிமிட வன்புணர்தல் மிகவும் குறைவானது என்று வேறு நீதிபதி கூற, கொந்தளித்த மக்கள், நீதிமன்றம் முன் கூடி 11 நிமிடம் என்பது மிக அதிகம் என்று கூறி, 11 நிமிடங்கள் மவுனமாக நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
நீதிபதி, தவறான ஒரு செய்தியை சமுதாயத்துக்கு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் மக்கள். அதாவது வருங்காலத்தில் இதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இந்த வழக்கை மேற்கோள் காட்டி, சிறிது நேரமே பெண் தாக்குதலுக்குள்ளானார் என்று கூறி தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளும் ஒரு தவறான முன்னுதாரணத்தை நீதித்துறை காட்டியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில், நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படத்தில் சட்டத்தரணியாக வரும் நடிகர் அஜீத் பேசும் 'A no is a no’ என்னும் வாதத்தை முன்வைத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டத்தரணி, தீர்ப்பு ஏமாற்றமளித்துள்ளதாகவும், தான் அதை அப்படியே விடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.