இடியாப்பம் சாப்பிட்டதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டது! மனைவி கண்முன்னே உயிரிழந்த கணவன்... மருத்துவமனை தந்த விளக்கம்
தமிழகத்தில் ஆக்சிஜன் சிகிச்சையை அகற்றியதால் தனது கணவர் உயிரிழந்தார் என மனைவி குற்றஞ்சாட்டிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இறப்புக்கான காரணம் குறித்து வேறு விளக்கத்தை கொடுத்துள்ளது.
கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜா என்பவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை மருத்துவர்கள் எடுத்ததால் அவர் மூச்சு விடமுடியாமல் துடித்துடித்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
மனைவி கண்முன்னே ராஜா இறந்ததால் அவர் கதறி அழுதார். இது குறித்து அவர் கூறுகையில், மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது என் கணவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை, அதனால் தான் அவர் உயிரிழந்தார்.
வேறு யாருக்கோ அவசரமாக தேவைப்படுகிறது என வெண்டிலேட்டரை எடுத்து சென்றுவிட்டார்கள் என கூறினார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், வெண்டிலேட்டரை எடுத்த போது ராஜா திட உணவாக இடியாப்பம் சாப்பிட்டதால் தான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகள் திட உணவு சாப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் வெண்டிலேட்டர், முக கவசத்தை அவிழ்த்து வைத்ததால் அவருக்கு முககவசம் தேவையில்லை என எடுத்து சென்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.