இரத்த புற்றுநோயால் அவதியுற்றுவந்த மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்
பிரித்தானியர் ஒருவர், இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றுவந்த தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்காக சிறையிலடைக்கப்பட்டார்.
மனைவியின் கோரிக்கை
பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice Hunter, 74)உடன் சைப்ரஸ் நாட்டில் வாழ்ந்துவந்தார். தம்பதியருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஜேனிஸ் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
கடுமையான வலியால் அவதியுற்றுவந்த ஜேனிஸ் தன் கணவரிடம் கோரிக்கை ஒன்றைவைத்தார். அது, தன் கணவரே தன் மூச்சை நிறுத்திவிடவேண்டும் என்பதே.
காதல் மனைவி படும் கஷ்டத்தை சகிக்க முடியாத டேவிட், மனைவியின் மூக்கையும் வாயையும் மூடி, அவரது மூச்சை நிறுத்திவிட்டார்.
இது நடந்தது, 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்.
சிறைத்தண்டனையும் விடுதலையும்
டேவிடுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சைப்ரஸ் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், நேற்று டேவிட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவர் ஏற்கனவே சிறையில் செலவிட்டுவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும், மனைவியின் வேதனையைக் கண்டதாலேயே அவரது மூச்சை நிறுத்த டேவிட் சம்மதித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மனைவி உயிரிழந்ததும், டேவிடும் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருந்தார். ஆனால், அவசர மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |