ஆதார் கூட எடுக்கவில்லை.,புர்கா அணியாததால் மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புர்கா அணியாததால் மனைவி, குழந்தைகளை கொன்ற கணவன்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃப்ரூக் என்ற சமையல் கலைஞர் தன்னுடைய 32 வயது மனைவி தாஹிரா மற்றும் இரண்டு மகள்களை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு புர்கா அணியாமல் தாஹிரா சென்றதால் ஆத்திரமடைந்த ஃப்ரூக் இந்த வெறிச் செயலை செய்துள்ளார்.

புர்கா அணியாமல் வெளியே சென்றதால் தன்னுடைய மரியாதை பாதிக்கப்பட்டு விட்டதாக உணர்ந்த ஃப்ரூக் டிசம்பர் 10ம் திகதி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி தாஹிராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு வந்த 14 வயது மகள் அஃப்ரின் என்பவரை சுட்டுக் கொன்றும், 7 வயது மகள் செஹ்ரீனை கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார்.
மேலும் இந்த கொலையை மறைக்க வீட்டின் பின்புறத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட 9 அடி குழியில் மூவரின் உடலையும் போட்டு புதைத்துள்ளார்.
கையும் களவுமாக சிக்கிய ஃப்ரூக்
தாஹிரா மற்றும் குழந்தைகளை 6 நாட்களாக காணவில்லை என்பது குறித்து தனது மகனிடம் விசாரித்த ஃப்ரூக்வின் தந்தை தாவூத், ஃப்ரூக்வின் முன்னுக்கு பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்தார்.
இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது ஃப்ரூக் தான் செய்த குற்றச் செயல்களை ஒப்புக் கொண்டுள்ளார்.
கடுமையான கட்டுப்பாடு
விசாரணையின் போது ஃப்ரூக் தனது குடும்பத்தினரிடம் எவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்து கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மனைவியின் முகம் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக மனைவிக்கு ஆதார் கார்டு கூட எடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் மாமனாரை கூட மனைவி சந்திக்க விடாதவாறு ஃப்ரூக் தடுத்து வந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |