கேரளப் பெண்ணை மணந்து வரதட்சிணைக் கொடுமை செய்த கணவர்: ஜேர்மனிக்கு தப்பியோட்டம்
கேரளாவில் பெண்ணொருவரைத் திருமணம் செய்து, ஒரு வாரத்திற்குள் வரதட்சிணை கேட்டு அவரை சித்திரவதை செய்த ஒருவர், ஜேர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
திருமணமான ஒரு வாரத்தில் சித்திரவதை
கேரளாவிலுள்ள கோழிக்கோடு என்னுமிடத்தைச் சேர்ந்த ராகுல் P கோபால் (29) என்னும் நபர், நேஹா* (26) என்னும் பெண்ணை இம்மாதம், அதாவது, மே மாதம் 5ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
திருமணமாகி ஒரு வாரத்திற்குள் ராகுல் நேஹாவை வரதட்சிணை கேட்டு அடித்து உதைத்தாக நேஹா குடும்பத்தினர் பொலிசில் புகார் செய்துள்ளார்.
12ஆம் திகதி, தன் முகம், தலை மற்றும் காது ஆகிய இடங்களில் தாக்கிய ராகுல், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், மொபைல் சார்ஜர் வயரால் கழுத்தை நெறித்ததாகவும், பெல்ட்டால் அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் நேஹா. அத்துடன், ராகுலும், அவரது குடும்பத்தினரும் நேஹாவை மது அருந்தக் கட்டாயப்படுத்த, அதை ராகுலின் நண்பரான ராஜேஷ் என்பவர் புகைப்படம் எடுத்ததாகவும் நேஹாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு தப்பியோட்டம்
இதற்கிடையில், தன் நண்பர் ராஜேஷ் உதவியுடன் ராகுல் பெங்களூரு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
ராகுல் தப்பிக்க உதவிய ராஜேஷைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், ராகுலின் தாய் உஷா குமாரி மற்றும் சகோதரி கார்த்திகா ஆகியோரையும் விசாரணைக்குட்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ராகுல் குறித்து ஜேர்மனியில் அவர் பணி செய்யும் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், இன்டர்போல் உதவியுடன் அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், ராகுல் பெயரில் இன்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். *தனியுரிமை கருதி சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |