காருக்குள் உயிரிழந்து கிடந்த மருத்துவர்: மனைவி மீது வழக்குப் பதிவு
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், மருத்துவர் ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட நிலையில், பொலிசார் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
காருக்குள் உயிரிழந்து கிடந்த மருத்துவர்
தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில் சாலையோரமாக கார் ஒன்றில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்தது குறித்து தெரியவந்த நிலையில், உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர், தன் கையில் ஊசி மூலம் நஞ்சொன்றை செலுத்திக்கொண்டது தெரியவந்தது.
விசாரணையில், அவரது பெயர் வினோத் குமார் (40) என்றும், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் மருத்துவராகப் பணியாற்றிவந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், குமாரின் மரணம் குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், குமாரின் மனைவி மீது புகார் தெரிவித்துள்ளனர்.
குமாரின் வருவாய் முழுவதையும் அவரது மனைவியே கட்டுப்படுத்திவந்ததாகவும், குமாரின் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முழுவதையும் அவர் துண்டித்துவிட்டதாகவும் குமாரின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குமார் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள தூண்டியதாக, குமாரின் மனைவி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |