கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி இந்திய பெண்ணிடம் கோடிக்கணக்கில் பண மோசடி
கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி ஹைதராபாத்தில் ரூ.5.7 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
கிறிஸ் கெய்ல்
மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான கிறிஸ் கெய்ல்(chris gayle), ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியதால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இந்நிலையில், கிறிஸ் கெய்ல் பெயரை பயன்படுத்தி நடந்த மோசடியில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ரூ.2.8 கோடி இழந்துள்ளார்.
பணத்தை இழந்த 60 வயதான பெண்ணிடம், கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த பெண்ணின் சகோதரரும், அவரது மனைவியும், போலியான காபி தூள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர்.
போலி காபி தூள் நிறுவனம்
இதன் மூலம், முதலீட்டில் மாதம் 4% லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த நிறுவனம் கென்யாவில் தளமாக கொண்டு இயங்கி வருவதாகவும், விரைவில் அமெரிக்காவில் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது நம்பிக்கையை பெற கிறிஸ் கெய்ல் இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் என சில படங்களை காட்டியுள்ளார். நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு தெரிந்தவர் என்றும், தானும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகப்போவதாக கூறியுள்ளார்.
அதனை நம்பி அந்த பெண்ணும் 2.8 கோடி முதலீடு செய்தார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் ரூ.2.2 கோடி முதலீடு செய்ய ஊக்குவித்துள்ளார். மற்றவர்களும் ரூ.70 லட்சம் முதலீடு செய்தனர்.
ரூ.5.7 கோடி முதலீடு
உண்மையான நிறுவனம் என காட்டிக்கொள்வதற்காக, ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு பணம் வழங்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த பணம் வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
தனது சகோதரனிடம் இது குறித்து கேட்ட போது, அந்த நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை.
மொத்தமாக ரூ.5.7 கோடி முதலீடு செய்த நிலையில், அவர்களுக்கு ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததில், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |