கர்ப்பிணிப்பெண்ணுக்கு முன்னாள் கணவரால் நேர்ந்த பயங்கரம்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதில், கர்ப்பிணியான தன் முன்னாள் மனைவியை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார் ஒருவர்.
பிரிந்த ஜோடி
தேவரகொண்டா மகேஷ் என்பவரும் சுனிதா (29) என்னும் பெண்ணும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன.
2024ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்த சுனிதா இந்தியா திரும்பிவிட்டார்.

சமீபத்தில் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, Vanasthalipuram என்னுமிடத்தில் தன் புது குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார் சுனிதா.
இந்நிலையில், புதன்கிழமையன்று சுனிதா வீட்டுக்கு வந்துள்ளார் மகேஷ். அவர் கையிலிருந்த பையில், இரண்டு கத்திகள், ஒரு போத்தலில் பெட்ரோல் மற்றும் ஒரு chainsaw ஆகியவை இருந்துள்ளன.
சுனிதா வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்துவந்த நிலையில், அவரது மாமியார் மாடியில் துணி காயப்போட சென்றிருக்க, சுனிதாவின் அறைக்குள் நுழைந்த மகேஷ், கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சுனிதாவை தலை முதல் பல்வேறு இடங்களில் சர்மாரியாக குத்திய மகேஷ், குளியலறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டுள்ளார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வர, அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது, அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வன்மத்தின் பின்னணி
மகேஷ், கடந்த ஆண்டு தன் தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா வந்துள்ளார்.
சுனிதா ஏற்கனவே அவர் மீது குடும்ப வன்முறை புகார் செய்திருந்ததால், மகேஷ் இந்தியா வந்ததும், விமான நிலையத்திலேயே அவரை மடக்கிய அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே சுனிதா தன்னைப் பிரிந்து வேறொருவரை திருமணம் செய்ததால் ஆத்திரத்திலிருந்த மகேஷ், சுனிதாவால் தனது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதால் மீண்டும் கனடாவுக்கு திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்படவே, சுனிதாவை பழிக்குப் பழி வாங்குவதற்காக, திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
சுனிதாவைக் கத்தியால் குத்திவிட்டு மகேஷ் குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டதைத் தொடர்ந்து, குளியலறையின் கதவை உடைத்து அங்கிருந்த மகேஷை கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |