குழந்தை போல் அடம்பிடிக்கும் இளம் வீரர்! தட்டித் தூக்குமா சிஎஸ்கே?
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என இளம் வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மற்றும் லக்னோ என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் 15 ஆவது ஐபிஎல் தொடர், இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏலம் 12 மற்றும் 13ம் திகதிகளில் நடைபெறுகிறது, ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்கள் அடங்கிய இறுதிபட்டியல் சமீபத்தில் வெளியானது.
இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.
மேலும் இளம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகளும் நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் இளம் வீரரான தீபக் ஹுடா சென்னை அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதாவது, 'சிஎஸ்கே அணியில் ஆடுவதைப் போல எதுவுமே இருக்கப் போவதில்லை. என்னுடைய சிறந்த ஐபிஎல் அணி என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். தோனியின் தலைமையின் கீழ் ஆட விரும்பும் ஒரு குழந்தையைப் போன்றவன் நான் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் ஒரு வெறித்தனமான தோனி ரசிகனும் கூட. அவருடைய தலைமை பண்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நான் நிறைய முறை பேசியிருக்கிறேன். நான் முன்பு இந்திய அணிக்காக வந்த போது, தோனியும் இருந்தார்.
அவருடன் அப்போதும் அதிகம் உரையாடியுள்ளேன். அதன் பிறகு, அவரை எப்போது சந்தித்தாலும் பேசிக் கொண்டே தான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவரது அடிப்படை தொகையாக 75 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.