என்னால் எனது பாஸ்போர்ட்டை இழக்க முடியாது... ஜேர்மன் குடியுரிமை விதிகள் மாற்றத்திற்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியில் தேர்தல் நடக்கும்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மன் குடியுரிமைச் சட்டங்களில் பெரும் மாற்றங்கள் செய்ய இருப்பதாக அறிவித்தது இப்போது ஆட்சி அமைத்துள்ள கூட்டணி.
அதுவும், புலம்பெயர்தல், குடியுரிமை முதலான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது.
ஆனாலும், குடியுரிமை தொடர்பான நடவடிக்கைகளில் இதுவரை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை.
பல வெளிநாட்டவர்களுக்கு அந்த மாற்றங்கள் சீக்கிரம் நடக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அரசு பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர், தங்கள் வாழ்வின் பல முக்கிய விடயங்களை நிறுத்திவைத்துவிட்டு, ஜேர்மன் பாஸ்போர்ட் பெறுவதற்காக தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் ஒன்றைத் தெரிவித்த உள்துறை அமைச்சக அலுவலர் ஒருவர், குடியுரிமைகள் அனுமதித்தல் மற்றும் குடியுரிமை பெறும் நடைமுறையை வேகப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் அரசுக்கு உள்ளது உண்மைதான் என்றும், ஆனால், அதை சட்டமாக்க எவ்வளவு காலமாகும் என்பதை இப்போதைக்கு கணிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி இரட்டைக்குடியுரிமை சட்டம் அமுல்படுத்தப்படுவது தாமதமாவதால், புலம்பெயர்வோர் பலர் அன்றாட வாழ்வில் அதன் தாக்கத்தை அனுபவித்து வருவதை மறுப்பதற்கில்லை.
சிலரது தொழில் தொடர்பான முடிவுகள், சிலரது முதலீடு முதலான முடிவுகள், சிலரது திருமணம் முதலான திட்டங்கள், சிலரது வாக்களிக்கும் கனவு என பல்வேறு விடயங்கள் இந்த தாமதத்தால் அந்தரத்தில் நிற்கின்றன.
வேறு சிலரோ, எங்களால் எங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்கள்.
உதாரணமாக, ஜேர்மன் குடிமகன் ஒருவரை திருமணம் செய்து, அவருக்கு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுவிட்டு, இப்போது விவாகரத்து ஆகிவிட்ட அமெரிக்கப் பெண் ஒருவர், ஜேர்மன் குடியுரிமை கிடைக்காததால் பல வேலை வாய்ப்புகளை இழந்து, ஒரு நிலையான முடிவை எடுப்பதற்காக ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் அதே நேரத்தில், எனது அமெரிக்கக் குடியுரிமையை விட முடியாது என்கிறார்.
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சினை. எனவே எப்போது அரசு அறிவித்த இரட்டைக் குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என தவிப்புடன் காத்திருக்கிறார்கள் புலம்பெயர்ந்தோர் பலர்!