நான் அகதியாக இருக்க விரும்பவில்லை...கனடாவில் சிக்கொண்டுள்ள உக்ரைன் இளம்பெண்ணின் பரிதாப நிலை
சுற்றுலா வந்த இடத்தில் கனடாவில் சிக்கிக்கொண்டுள்ள உக்ரைன் நாட்டு இளம்பெண் ஒருவர், தன் தாய்நாட்டுக்கும் திரும்ப வழியில்லாமல், கனடாவிலும் வேலை செய்ய வழியில்லாமல் பரிதவித்து வருகிறார்.
உக்ரைன் தலைநகர் Kyivஐச் சேர்ந்தவர் Svitlana Trofymchuk (49). ரொரன்றோவிலுள்ள தன் நண்பர்களைச் சந்திப்பதற்காக அவர் கனடா வந்திருந்த நேரத்தில்தான் உக்ரைனில் போர் வெடித்தது.
இப்போதைக்கு அங்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்பதால் உக்ரைன் செல்ல முடியாத நிலையிலிருக்கும் Svitlana, visitor விசாவில் வந்திருப்பதால் கனடாவில் வேலை செய்யவும் முடியாது என்பதால், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்.
Kyivஇல், பெண்களுக்கான சமூக கூடுகை மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் சொந்தத் தொழில் செய்துவரும் Svitlana, கனடாவில் வேலை இல்லாமலும், வேலை செய்ய இயலாமலும் தவிக்கிறார்.
ரொரன்றோவில் அவர் வாடகைக்கு எடுத்துள்ள அறையை மார்ச் 27 அன்று அவர் காலி செய்தாகவேண்டும் என்பதால், அதற்குப் பிறகு என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார் Svitlana.
சில மாற்று உடைகள், ஒரு உபரி ஜோடி காலணிகள் தவிர்த்து அவரிடம் வேறு எதுவும் இல்லை, பணமும்தான்!
எனக்கு அகதியாக இருக்க விருப்பமில்லை, ஏனென்றால், என் நாடு சீக்கிரம் போரிலிருந்து விடுபட்டுவிடும் என்று நான் நம்புகிறேன் என்று கூறும் Svitlana, அதே நேரத்தில், என்னால் என் வீட்டுக்கும் செல்ல முடியாது என்கிறார்.
என் அலுவலகம் Kyivஇல் என்பதால், என்னிடம் பணமும் இல்லை என்று கூறும் Svitlana, நான் வேலை செய்யவே விரும்புகிறேன், ஆனால், இங்கே என்னால் வேலையும் செய்ய முடியாது. நான் எப்படி வாழப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.
இப்படி கனடாவில் வந்து சிக்கிக்கொண்டவர்களுக்காகவும், உக்ரைனிலிருந்து கனடா வந்துள்ளவர்கள் மற்றும் கனடாவுக்கு வரவிருப்பவர்களுக்காகவும் அரசு திட்டங்கள் வகுத்து வருகிறது. ஆனாலும், அவற்றை நிறைவேற்ற சிறிது காலமாகும்.
தான் முன்னர் ஒரு ஃபிட்னஸ் ட்ரெய்னராக இருந்ததால் தன்னால் அந்த வேலையைச் செய்யமுடியும் என நம்புகிறார் Svitlana. ஆனாலும், தன் தாய்நாட்டில் பாதுகாப்பான சூழல் உருவானதும் தன் தாய்நாட்டுக்குத் திரும்பவே தான் விரும்புவதாகத் தெரிவிக்கிறார் அவர்.