வினேஷ் போகத் உயிரிழந்து விடுவாரோ என பயந்தேன்! மனம் திறந்த பயிற்சியாளர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை குறைப்புக்காக இந்திய மல்யுத்த வீராங்கனை மேற்கொண்ட பயிற்சிகளால் அவர் உயிரிழந்து விடுவாரோ என்று பயந்ததாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
மனு தள்ளுபடி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நிமிடத்தில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் குறைந்தப்பட்சம் உறுதிசெய்யப்பட்ட வெள்ளிப் பதக்கத்தையாவது தனக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் இதனை விசாரணை செய்த நடுவர் மன்றம், கடந்த 14ம் திகதி வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து ஒலிம்பிக் பதக்க கனவு கைநழுவிய நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்ஸ்டாகிராமில் விரக்தியில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
பயிற்சியாளர் கருத்து
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடை குறைப்புக்காக வினேஷ் போகத் மேற்கொண்ட உடற்பயிற்சிகளால் அவர் உயிரிழந்து விடுவாரோ என மிகவும் பயந்தேன் என ஹங்கேரியை சேர்ந்த அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் கூறியுள்ளார்.
மேலும், வினேஷ் போகத் என்னிடம் பேசிய போது, நீங்கள் எதற்கும் வருத்தம் கொள்ள வேண்டாம், நான் உலகின் தலைசிறந்த வீராங்கனையான ஜப்பானின் யுகி சுசாகியை தோற்கடித்து உள்ளேன்.
என் இலக்கை அடைந்து விட்டேன், நானும் உலகின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர் என்று நிருபித்து இருக்கிறேன், பதக்கம் மற்றும் அதற்கான பதக்க மேடைகள் எல்லாம் வெறும் பொருட்கள் தான், ஆனால் என்னுடைய திறமையை யாராலும் பறிக்க முடியாது என வினேஷ் போகத் கூறியதாக பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |