நான் குண்டாக அசிங்கமாக இருக்கிறேன்... பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வெளியிட்டுள்ள வீடியோ
பிரித்தானிய வரலாற்றில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்திய நபர் சுய பச்சாதாப வீடியோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் Plymouth என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் தன் வீட்டிலிருந்து கையில் துப்பாக்கி ஒன்றுடன் வெளியேறிய Jake Davison (23) என்ற நபர், சில வீடுகள் தள்ளி அமைந்திருந்த ஒரு வீட்டின் கதவை காலால் உதைத்துத் திறந்து அந்த வீட்டிற்குள் இருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். அந்த வீட்டிலிருந்தவர்கள் அவரது உறவினர்கள் என கருதப்படுகிறது.
அதற்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறிய Jake, சாலையில் கண்ணில் பட்டவர்களையும், பூங்கா ஒன்றில் வாக்கிங் சென்று கொண்டிருந்தவர்களையும் சுட்டிருக்கிறார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் ஒரு ஐந்து வயது குழந்தை, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்துபேர் உயிரிழந்துள்ளார்கள். ஏராளமானோர் காயமடைந்துள்ளார்கள்.
பின்னர், Jake தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் சில வெளியாகியுள்ளன. அவற்றில் ஒன்றில், தான் குண்டாக அசிங்கமாக இருப்பதாகவும், இதுவரை எந்த பெண்ணுடனும் பாலுறவு கொண்டதில்லை என்றும் தன்னைக் குறித்து சுயபச்சாதாபத்துடன் பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலுறவுக்கு பெண் கிடைக்காத சிலர், பெண்கள் மீது வெறுப்புற்று இதுபோன்று செய்வதுண்டு. இன்செல் என்ற அமைப்பைச் சேர்ந்த Elliot Rodger என்ற அமெரிக்கரும், Alek Minassian என்ற கனேடியரும் முன்பு இதேபோல் பலரைக் கொன்றுகுவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடுமையாக ஆயுதக் கட்டுப்பாடு உடைய பிரித்தானியாவில் அந்த நபருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரித்தானியாவில் 11 ஆண்டுகளில் முதன்முறையாக இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.