டோனிக்கு கடைசி கட்டத்தில் இந்த பந்தை மட்டும் நான் வீசமாட்டேன்! ரசிகரின் கேள்விக்கு பேட் கம்மின்ஸ் பதில்
அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், டோனிக்கு கடைசி கட்ட ஓவர்கள் போட விரும்பமட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணி வீரரும், அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், இணையவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் கடைசி ஒரு பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும், பேட்ஸ்மேனாக டோனி இருக்கிறார் என்றால், நீங்கள் என்ன பந்து வீசுவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பேட் கம்மின்ஸ், கடைசி கட்ட ஓவர்களில் பல பந்து வீச்சாளர்கள் டோனி எதிராக யார்க்கர் பந்துகளை வீச நினைப்பார்கள். பந்து வீச்சாளர்கள் அதை தவறவிடும்போது அந்த பந்துகளை டோனி சிக்ஸருக்கு பறக்கவிட்ட பல வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்.
அதனால் அவருக்கு எதிராக நான் யார்க்கர் பந்தை வீச நினைக்க மாட்டேன். ஒரு ஸ்லோவர் பந்தையோ அல்லது பவுன்சர் பந்தையோ தான் வீச நினைப்பேன்.
டோனிக்கு எதிராக கடைசி கட்ட ஓவர்களில் நான் பந்து வீசவே விரும்ப மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.