விரலை வெட்டி வீட்டுக்கு முன் தொங்கவிட்டுவிடுவேன்... சினிமாவில் வருவதுபோல் கனடாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்
தமிழ் சினிமா ஒன்றில், வில்லன், தான் கடத்தியவர்களின் விரலை வெட்டி அவர்களது வீட்டின் முன் தொங்கவிட்டுவிடுவதுபோல் ஒரு காட்சியைப் பார்த்திருப்போம்.
அதேபோல் கனடாவில் விரலை வெட்டி வீட்டுக்கு முன் தொங்கவிட்டுவிடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்றில், விரல் மட்டும் அல்ல, அந்த சினிமாவைப்போலவே உயிர் ஒன்றும் பறிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டாவிலுள்ள Medicine Hat என்ற இடத்தில் வாழ்ந்த ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், நாங்கள் உன்னையும் உன் மனைவியையும் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம், எங்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் தரவேண்டும்.
நீ பணத்தை தராவிட்டால், உன் உறவினர்கள், உனக்கு தெரிந்தவர்கள், உனக்கு அதிகம் நெருக்கமில்லாதவர்கள் என வரிசையாக கொல்லுவோம் என எழுதப்படிருந்திருக்கிறது.
நாங்கள் நினைத்தால் ஒரு விரலையோ, காதையோ அல்லது நாக்கையோ வெட்டி உன் அலுவலக வாசலில் தொங்கவிடமுடியும். ஆனால், உன்னுடன் வேலை செய்பவர்களை பயமுறுத்த நாங்கள் விரும்பவில்லை.
ஆகவே, ரேடியோ கேள், அதில் ஒருவர் கொல்லப்பட்ட செய்தி வெளியாகும் என்று அந்த கடிதம் கூறியுள்ளது.
அதேபோல், அடுத்த நாள், James Satre (63) என்பவரது உயிரற்ற உடல், கத்திக்குத்துக் காயங்களுடன் அவரது வீட்டுக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது.
தாங்கள் பயங்கரமானவர்கள், பணம் தராவிட்டால் கொலை கூட செய்வோம் என மிரட்டுவதற்காக, அப்பாவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனக்கு உறவு என்று கூற ஒரு அண்ணன் மட்டுமே இருந்த நிலையில், அவரும் காரணமேயில்லாமல் படுபயங்கரமாக கொல்லப்பட்டதால் Jamesஇன் சகோதரி Marie கடுமையான பாதிப்புக்குள்ளானார்.
இந்நிலையில், உயிரிழந்த Jamesஇன் உடல் மற்றும் அனுப்பப்பட்ட கடிதங்களில் ஒரு நபரின் DNA கிடைத்தது. அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, அவரது கணினியில், அவர் அனுப்பிய மிரட்டல் கடிதங்களின் நகல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் Robert Hoefman என்பவர் கைது செய்யப்பட்டார்.
பணத்துக்காக ஒருவரை மிரட்டி, தான் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்வேன் என அவருக்கு காட்டுவதற்காக அப்பாவி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக Robertக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.