மதுரைக்கு மருமகளாக வந்த ஐஏஎஸ் அதிகாரி.., விருப்ப ஓய்வு பெற கோருவதால் அரசியலில் பரபரப்பு
தமிழரான வி.கே.பாண்டியனின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு பெற கோருவதால் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
யார் இவர்?
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தவர் தமிழரான வி.கே.பாண்டியன். இவர், அவருக்கு தனிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர், அரசியலில் இணைவதற்காக தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை 2023-ல் ராஜினாமா செய்தார். இவரது மனைவி சுஜாதா ராவுத் கார்த்திகேயனும் ஐஏஎஸ் அதிகாரி தான்.
இவரும் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது தற்போது அரசியலில் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இவர், டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியலும் ஜே.என்.யூவில் முதுகலை சர்வதேச அரசியலும் பட்டம் பெற்றுள்ளார்.
2000-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். இவர் மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், சுந்தர்கர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். இதையடுத்து, 2005-ம் ஆண்டில் போக்குவரத்து வசதி இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
மேலும், ஒடிசா கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதை அறிந்த சுஜாதா, அவர்களுக்கு விளையாட்டில் ஈடுபட கால்பந்துகளை விநியோகித்தார்.
அதோடு, கடந்த 2006-ல் சுந்தர்கர் பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை இயக்குநராக பணியில் சேர்ந்த போது மம்தா மகப்பேறு நலத்திட்டத்தை அறிமுகம் செய்தார்.
பின்னர், பல ஆண்டுகளாக ‘மிஷன் சக்தி’ திட்டத்துக்கு தலைமை தாங்கினார். மேலும், சிறு குறு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்க ஏற்பாடு செய்தார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு விடயங்களை செய்த சுஜாதா தற்போது விருப்ப ஓய்வு பெற கோரிக்கை வைத்துள்ளார்.
இவர், விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நிலையில், அவரது கோரிக்கையை அரசு அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |