சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம்
மக்கள் பிரச்சினைகளை விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
தமிழக மாவட்டமான விருதுநகர், வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் முருகவன் மற்றும் முல்லைக்கொடி. இதில் முருகவன் விவசாயியாக இருக்கிறார்.
இவரது மகன் பிரதாப். எளிய குடும்பத்தில் பிரதாப் பிறந்திருந்தாலும் பட்டதாரி ஆனார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஆட்சியராக வேண்டும் என்று கனவு இருந்ததால் அதற்கான வேலைகளை செய்ய தொடங்கினார்.
இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்தார். பின்னர், முதல் முயற்சியிலே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர், 2017-ம் ஆண்டு பேட்ச் பணியில் சேர்ந்தார். அப்போது, வெளிவந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் முதலிடம் பிடித்தவர் பிரதாப் தான்.
2017-18 ஆம் ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயிற்சி அதிகாரியாகவும், 2018-19 காலகட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும் பயிற்சி பெற்றார்.
இதையடுத்து, 3 மாதங்கள் இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர், 2019-ம் ஆண்டில் தர்மபுரி மாவட்டம் அரூரில் துணை ஆட்சியராக பணியாற்றினார்.
அப்போது, 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்கவும், அரூரில் இருந்த மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றினார். ஒரே மாதத்தில் 1,000 குளங்களை வெட்டுவதற்கான ஆணையை பெற்று கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தார்.
இதன் மூலம் முதலமைச்சர் விருது பெற்று முக்கியமான அரசு அதிகாரியாக கவனம் பெற்றார். இதையடுத்து, 2022-ம் ஆண்டில் கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார்.
அதோடு, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாளராகவும் இருந்துள்ளார். அங்குள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தது பெரும் பாராட்டுக்களை இவருக்கு பெற்று தந்தது.
பின்னர், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி கழகம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறைகளிலும், 2024-25 காலகட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப் ஐஏஎஸ் பொறுப்பேற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |