இந்திய வம்சாவளி அமெரிக்கா கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை
இந்திய வம்சாவளியான போடுகம் அகிலேஷ் ரெட்டி, அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக 4 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நவம்பர் 19, 2025 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரின்போது, 'ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ்' அணியின் முதல் போட்டிக்கு முன்பாக, ஹொட்டல் அறையில் தனது சக வீரர் ஒருவரை பந்துவீச்சின்போது திட்டமிட்டு கூடுதல் ஓட்டங்களை விட்டுக்கொடுக்குமாறு வறுபுறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த வீரர், உடனடியாக ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ACU) புகார் அளித்துள்ளார்.
போட்டி தொடங்கும் முன்பாகவே அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், போட்டியின் முடிவை அல்லது போக்கை தவறான முறையில் மாற்ற முயன்றது, மற்றொரு வீரரை சூதாட்டம் தொடர்பான ஊழலில் ஈடுபட தூண்டியது மற்றும் விசாரணைக்கு தேவையான வாட்ஸ்அப் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களை அழித்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.
இதனையடுத்து, கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்த தடை அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 21 ஆம் திகதி முதல் பொருந்தும் என்பதால்,2033 நவம்பர் 21 வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |