பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க த்ரில் வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷஃபிக் (9), இமாம் (12) என சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ரிஸ்வான் 31 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் பின்னர் வந்த சவுத் ஷகீல் 52 ஓட்டங்களும், ஷதாப் கான் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளும், ஜென்சென் 3 விக்கெட்டுகளும், கோட்ஸி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
த்ரில் வெற்றி
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் தேம்பா பாவுமா(28) ஓட்டங்களும், டி காக் (24) ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய வான் டெர் டுசென்(21), ஹென்ரிச் கிளாசென்(12), மில்லர்(29) என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஆனால் அணியின் வெற்றிக்காக உறுதியுடன் விளையாடிய ஐடன் மார்க்ராம் 93 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 91 ஓட்டங்கள் சேர்ந்து இருந்த போது உசாமா மிர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் ஆட்டத்தின் 47.2 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றி இலக்கான 271 ஓட்டங்களை தென் ஆப்பிரிக்க அணி அடைந்தது.
இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |