டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியானது! இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான, உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. இந்த 7-வது உலககோப்பை டி20 தொடர் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த தொடரை இந்தியா எடுத்து நடத்த முடிவு செய்தது.
ஆனால், இந்தியாவிலும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருவதால், இந்தியா இந்த தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்து, அதற்கான வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ஆம் திகதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 14-ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடக்கிறது.
இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா உட்பட தகுதி பெற்றுள்ள 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் வங்காளதேசம், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் உள்ளன.
அக்டோபர் 17-ஆம் திகதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமன்- பப்புவா நியூகுனியா மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
இதைத் தொடர்ந்து 22-ஆம் திகதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். அதன் பின், சூப்பர் 12 ஆட்டங்கள் அக்டோபர் 23-ஆம் திகதி தொடங்குகிறது.
இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.
தகுதி சுற்றில் பி பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், ஏ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியும் குரூப் 2 பிரிவில் இடம்பெறும். இன்று வெளியிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ஆம் திகதி மோதுகின்றன.
குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 8-ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 10 மற்றும் 11-ஆம் திகதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி நவம்பர் 14-ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.