உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான விதிமுறைகளை வெளியிட்ட ஐ.சி.சி: டிரா அல்லது மழை பெய்தால் என்ன முடிவு தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடருக்கான இறுதி ஆட்டம் வரும் ஜுன் மாதம் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைப்படி இந்த போட்டி டிரா ஆனால் சாம்பியன்ஷிப் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், போட்டி ஐந்து நாட்கள் நடைபெறும். அதே போன்று ஒவ்வொரு நாளும் தலா 90 ஓவர்கள் வீசப்படும் மழை காரணமாக ஓவர்கள் குறைவாக வீசப்பட்டால் ஆறாவது நாளில் போட்டி நடைபெறும்.
இந்த ஆறாவது நாள் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டே வாக அறிவிக்கப்படும். ஒரு நாள் முழுவதுமே போட்டி மழையால் அல்லது மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டால் 6 ஆவது நாள் போட்டி முழுவதுமாக நடத்தப்படும்.
டிஆர்எஸ் செல்வதற்கு முன்னர் அம்பயர் ஏன் அவுட் கொடுத்தார் அல்லது நாட்அவுட் கொடுத்தார் என வீரர்கள் அம்பயரிடம் கேட்டுவிட்டு பிறகு டிஆர்எஸ் முடிவை எடுக்கலாம்.
அதேபோன்று மைதானத்தில் வீரர்கள் இடையே சர்ச்சை ஏற்பட்டால் நடுவர்கள் மேட்ச் ரெபிரியிடம் முறையிட வேண்டும் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.