உக்ரைனில் களமிறங்க உத்தரவு... தயாரென அறிவித்த பிரித்தானிய இராணுவம்
அரசாங்கம் கேட்டுக் கொண்டால் உக்ரைனில் களமிறங்கத் தயாராக இருப்பதாக பிரித்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.
முற்றிலும் தயாராக உள்ளது
இந்த வாரம், பிரித்தானிய இராணுவத்தின் உயர் தயார்நிலைப் படையான முதல் பிரிவைச் சேர்ந்த 2,500 வீரர்கள், ருமேனியாவில் மிகப் பெரிய நேட்டோ பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.
குறித்த பகுதியானது உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 16 மைல்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது.
இந்தப் பயிற்சியில் அலைபேசிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கான ஆரம்ப விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதை பெரும்பாலான வீரர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.
பிரிகேடியர் ஆண்டி வாட்சன் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு அனுப்ப உத்தரவுகள் கிடைத்தால் புறப்படுவதற்கு அவரது படைப்பிரிவு முற்றிலும் தயாராக உள்ளது என்றார்.
உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரித்தானிய இராணுவத்தை அனுப்பத் தயாராக இருப்பதாக இந்த வார தொடக்கத்தில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியிருந்தார்.
இதனிடையே தேவைப்படும் வீரர்களின் எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிட்டுள்ள பிரிகேடியர் ஆண்டி வாட்சன், அது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சகமும் முடிவெடுப்பதைப் பொறுத்தது என்றார்.
மேலும், இந்த முயற்சிகளுக்கு பிரித்தானியாவின் பங்களிப்பு தொடர்பில் பிரதமர் மிகத் தெளிவாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அதை பிரித்தானியா மட்டுமே முன்னெடுக்கக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக உள்ளார் என பிரிகேடியர் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.
100,000க்கும் மேற்பட்ட வீரர்கள்
இதனிடையே, ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் ஐரோப்பா முழுவதும் 1,400 மைல்கள் 700 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை நகர்த்த முடியும் என்று பிரித்தானியா நிரூபித்துள்ளது.
மேலும் பிரித்தானியாவால் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதுடன் எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால் உக்ரைனுக்குள் எந்தவொரு அமைதி காக்கும் நடவடிக்கைக்கும் தேவைப்படலாம் என்று பெரும்பாலான இராணுவ நிபுணர்கள் நம்பும் எண்ணிக்கையில் இது 10 சதவிகிதம் மட்டுமே.
தற்போதைய சூழலில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைனுக்குள் தேவைப்படலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 2009 ல் பிரித்தானிய வீரர்கள் ஹெல்மண்டிற்கு அனுப்பப்பட்டபோது, பிரித்தானிய இராணுவத்தில் 100,000 க்கும் மேற்பட்ட வழக்கமான வீரர்கள் இருந்தனர்.
தற்போது உக்ரைனுக்கு படைகளை அனுப்புவதாக இருந்தால் அவசர செயல்பாட்டு உபகரணங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதிய துருப்புக்களை அனுப்புவதற்கான கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், 2011 ல் லிபியாவில் நேட்டோ படைகள் களமிறங்கிய போது, தங்களின் மிகப்பெரிய கூட்டாளி அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக தத்தளித்ததும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |