இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை: கமல் ஹாசன் உருக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பவதாரணி மறைவு
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக நேற்று இலங்கையில் உயிரிழந்தார். இவர், கடந்த 6 மாதங்களாகவே இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர், 10 படங்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல், பாரதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'மயில் போல பொண்ணு' பாடலைப் பாடியதற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல் இரங்கல்
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் பவதாரணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன்.
பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |