தமிழக மக்களின் உரிமைக்காக.. திரிஷா பெயரில் பேரவை தொடங்கிய ரசிகர்கள்
ilaya puratchi thalaivi trisha peravai launched in thirunelveli: இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை
தவெக தலைவர் விஜய் முதல்வரான பின்னர், நடிகை திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்துள்ளது.
முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் திரிஷா பங்கேற்றிருந்தார்.

விரைவில் த்ரிஷாக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால் அமைப்பின் லோகோவினை வெளியிட்டார்.
பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக என்ற வாசகத்துடன் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதல் முறையாக சகோதரி திரிஷா பேரவையை திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கி உள்ளோம். இதன் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன். இனிமேல் மாவட்ட வாரியாக எங்களுடைய சமூக பணிகளை கொண்டு செல்வோம்.

தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால், ஜெயலலிதாவின் ஆட்சியைப் போன்ற சிறப்பான ஆட்சியை வழங்க முடியும்.
திரிஷாவிடம் ஜெயலலிதாவைப் போன்ற ஆளுமை உள்ளது. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும், பல்வேறு இடங்களில் அவருடைய செயல்பாடுகளைக் கவனித்தவர்களுக்கும் அவரது ஆளுமை தெரியும். இதன் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் வழித்தோன்றலாக திரிஷாவை பார்க்கிறோம். அதனால் அவருக்கு ‘இளைய புரட்சித்தலைவி’ என்ற பட்டத்தைச் சூட்டியுள்ளோம்.
இந்தப் பேரவை அரசியல் சார்புடைய அமைப்பாகச் செயல்படாது. முதற்கட்டமாக மரம் நடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துவது, சட்ட உதவி உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
திரிஷா எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட அரசியல் முடிவுகளை அவர்தான் எடுக்க வேண்டும், த்ரிஷாவிடம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. இனிதான் அவரை சந்திக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.