இளையராஜாவே ஒரு கடவுள் தான், அவர் கோவிலுக்கு செல்ல அவசியம் இல்லை: நடிகை கஸ்தூரி விமர்சனம்
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
நடிகை கஸ்தூரிபேட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற போது இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் மரியாதை செலுத்துவதற்காக மட்டுமே இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்த பிறகு நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் புதிய காற்று வீச வேண்டும் என்றால் புதிய கூட்டணி உருவாக வேண்டும். அதற்கு ஒருமித்த கூட்டணி அவசியம். கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது.
இளையராஜாவை கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என சொல்கின்றனர். அவரே ஒரு கடவுள் தான். கோயில் தான். கடவுளுக்கு கோயிலுக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவரை கோயில் கருவறைக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன். கோயில் கருவறைக்குள் எந்த சாதியாக இருந்தாலும் செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |