துக்கத்தில் ஆழ்த்திவிட்டது... விவேக் போல இன்னொருவரை பார்ப்பது அரிது: உருகிய இளையராஜா
நடிகர் விவேக்கின் மரணம் தன்னை மிகுந்த துக்கத்தில் அழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ள இளையராஜா, அவர் வைத்திருந்த அன்பையும் அபிமானத்தையும் மற்றொருவரிடம் பார்க்க முடியாது என மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனிற்றி இன்று அதிகாலை காலமானார்.
மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றைத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையிலிருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனம் அழிந்துவிட்டது.
காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், மிகுந்த அன்பையும் அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர்.
அவர் என் மீது வைத்திருந்த அன்பையும் அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.